சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, விஜய்–அஜித் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)

வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. இருவரும் மனது வைத்தால் இணைந்து நடிக்கலாம்!

***

‘அசுரன்’ படம் எப்போது வெளிவரும்? அதில் தனுசுக்கு ஜோடி யார்? அந்த படம் பற்றிய கூடுதல் தகவலை சொல்ல முடியுமா? (வே.கவுதம், முகப்பேர்)

‘அசுரன்’ படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி, மஞ்சுவாரியர்!

***

குருவியாரே, வடிவேல் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில், அதிக வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் எது? (ஆர்.சிங்காரவேலன், தஞ்சை)

‘வின்னர்’ படத்தில் இடம்பெற்ற ‘கைப்புள்ள!’ தமிழ் சினிமா உள்ளவரை சிரிக்க வைக்கும் கதாபாத்திரம், இது!

***

விளம்பர படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் நடிகைகள் யார்–யார்? (எச்.கமால் பாட்ஷா, வேலூர்)

ரேவதி, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய நான்கு பேரும் விளம்பர படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்!

***

குருவியாரே, சிம்பு திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறாரே...ஏன்? (எம்.தேசிகன், கடலூர்)

திருமண வாழ்க்கையில் சிம்புவுக்கு உடன்பாடு இல்லையாம். எனவேதான் அவர் திருமணத்துக்கு அவசரப்படவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்!

***

நடிகை ஸ்ரீதிவ்யா எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் நடிக்கிறாரா? (கே.சம்பத், புதுச்சேரி)

ஸ்ரீதிவ்யா, ஐதராபாத்தை சேர்ந்தவர். அவர் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடிக்கிறார். தமிழில் தற்போது அவருக்கு படங்கள் இல்லை. தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, ஹன்சிகா, சமந்தா ஆகிய இருவரில் அதிக கலராக இருப்பவர் யார்? (வி.கோதண்டராமன், திருச்சி)

சமந்தாவை காட்டிலும் ஹன்சிகா அதிக கலர்!

***

சமீபகாலமாக பேய் படங்களை பார்த்து யாரும் பயப்படுவதில்லை என்று பேசப்படுகிறதே...அது உண்மையா? அதற்கு காரணம் என்ன? (என்.அஸ்வின், தூத்துக்குடி)

பேய்களை சிரிப்பு பேய்களாக காட்டியதால் ஏற்பட்ட விளைவு அது! இதே பாணியில் படங்கள் வந்தால், பேய்களை பேட்டி எடுக்க எல்லோரும் தயாராகி விடுவார்கள்!

***

குருவியாரே, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய 4 பேரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால்...? (கே.ரமேஷ், கோவை)

அந்த படத்தை தயாரித்தவர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் கோடிகளில், ‘கல்லா’ கட்டுவார்கள்!

***

முன்னாள் கதாநாயகி ராதா நடித்த படங்களிலேயே அவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட படம் எது? (பெ.சண்முகராஜன், கோத்தகிரி)

‘முதல் மரியாதை!’ அந்த படத்தில், ராதா கதாபாத்திரமாகவே மாறியிருந்தார். அவருடைய நடிப்பை பாராட்டி, ஏராளமான விருதுகள் வந்து குவிந்தன!

***

குருவியாரே, அஞ்சலி அறிமுகமான தமிழ் படம் எது? அந்த படத்தை இயக்கியவர் யார்? கதாநாயகன் யார்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

அஞ்சலி, ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை இயக்கியவர், ராம். கதாநாயகன், ஜீவா!

***

‘‘காதல் ராஜ்ஜியம் எனது...காவல் ராஜ்ஜியம் உனது...’’ என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? அந்த பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (டி.ஜேக்கப், நாகர்கோவில்)

அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘மன்னவன் வந்தானடி.’ பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, ரெஜினா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் எது? அது எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படம்? (பி.சீனிவாசன், ஸ்ரீரங்கம்)

ரெஜினா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம், ‘7’. இது, ஒரு திகில் படம்!

***

விஷாலை வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களா? (சி.ரவீந்திரதாஸ், நெய்வேலி)

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரை கதாநாயகனாக பார்க்கவே ஆசைப்படுவார்கள். வில்லன்களாக பார்க்க விரும்பமாட்டார்கள்!

***

குருவியாரே, நயன்தாரா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிற அளவுக்கு அவருடைய தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்? (எம்.மீனாட்சி சுந்தரம், அம்பாசமுத்திரம்)

மலையாள படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பதில்லை. லட்சக்கணக்கில்தான் சம்பளம் கிடைக்கும். தமிழ் படங்களுக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் கொடுக்கிறார்கள். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதற்கு இதுவே காரணம்!

***

‘ஈரமான ரோஜாவே’ படத்தின் நாயகன் சிவா என்ன ஆனார்? (ஜே.வி.அசோக், மதுரை)

சிவா இப்போது, சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, அமலாபால் நடித்த படங்களில் அவரால் மறக்க முடியாத படம் எது? (ஜி,ஜெயராம், தேனி)

‘சிந்து சமவெளி!’ இனிமேல் அவரே நினைத்தால் கூட, ‘அந்த மாதிரி’ படம் ஒன்றில் நடிக்க முடியாதாம்!

***

‘சண்டக்கோழி–2’ படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (எஸ்.சாரதாப்ரியன், செங்கோட்டை)

இருவரும் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால், உடனே ‘கால்ஷீட்’ கொடுத்து விடுவார்கள்!

***

குருவியாரே, திரிஷாவின் நீண்ட கால ஆசை நிறைவேறி விட்டதா, இனிமேல்தான் நிறைவேறுமா? (ஜெ.பார்த்தசாரதி, உடுமலைப்பேட்டை)

‘‘இன்னும் நிறைவேறவில்லை’’ என்கிறார், திரிஷா!

***

சந்தானம் நகைச்சுவை வேடங்களை தவிர்த்து கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுவது ஏன்? (வி.அருண், சென்னை–1)

நகைச்சுவையாகவே நடித்துக் கொண்டிருந்தால், கதாநாயகிகளுடன் டூயட் பாட முடியாதே...!

***