இந்தி படவுலகின் முதல் ‘ஆக்‌ஷன்’ நாயகி


இந்தி படவுலகின் முதல் ‘ஆக்‌ஷன்’ நாயகி
x
தினத்தந்தி 1 Jun 2019 11:24 AM GMT (Updated: 1 Jun 2019 11:24 AM GMT)

இந்தி படவுலகின் முதல் ஆக்‌ஷன் நாயகியாக ஜொலித்தவர், ஆஸ்திரேலியப் பெண்ணான மேரி ஈவான்ஸ்.

மேரியின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. முதலாவது உலகப் போருக்குச் சற்று முன் தனது படையுடன் மும்பைக்கு இடம்பெயர்ந்த தந்தையுடன் இங்கு வந்தார், மேரி. பின்னர் அவரது குடும்பம், பெஷாவருக்கு இடம்பெயர்ந்தது.

அந்த வடமேற்குப் பிராந்தியத்தின் கரடுமுரடான நிலப்பரப்பில் வளர்ந்ததால், வெளிப்புறத்தில் நேரத்தைக் கழிப்பதிலும், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், வேட்டையாடுதல் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டார் மேரி.

1928-ல் மீண்டும் மும்பை திரும்பிய மேரி, பாலே நடனம் கற்றார். ஒரு நடனக் குழுவுடன் இந்தியா முழுக்கப் பயணம் செய்தார். படை வீரர்கள் முன்பும், ஆட்சி யாளர்கள் முன்பும் நடன நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகப்படுத்தினார்.

நடனத்தைத் தொடர்ந்து சர்க்கசிலும் இறங்கினார், மேரி. தொடர்ந்து, 1934-ம் ஆண்டு ‘தேஷ் தீபக்’, ‘நூர்-இ-யாமன்’ ஆகிய இந்திப் படங்களில் சிறுசிறு வேடங்களில் மேரி தோன்றினார். 1935-ல் முதல்முறையாக, ‘ஹன்டர்வாலி’ என்ற படத்தில் நாயகி வாய்ப்புப் பெற்றார். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.

ஆக்‌ஷன் படமான ஹன்டர்வாலியில் தனது அதிரடி ஆக்‌ஷனால் அசத்தியிருந்தார், மேரி.

பொன்னிறக் கேசமும் நீலநிறக் கண்களும் கொண்ட மேரியின் சாகசங்கள் இந்திய திரை ரசிகர்களை மெய்மறக்கச் செய்தன. மேரி நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன.

அவற்றில், ‘ஹன்டர்வாலி’ படத்தின் இரண்டாம் பாகமாய் 1943-ல் வெளியான ‘டாட்டர் ஆப் ஹன்டர்வாலி’, அதைத் தொடர்ந்து திரையரங்கம் கண்ட ‘டைக்ரஸ்’, ‘ஸ்டன்ட் குயின்’, ‘ஜங்கிள் பிரின்சஸ்’, ‘பாக்தாத் கா ஜாதூ’, ‘கிலாரி’ ஆகிய படங்கள் அடங்கும்.

இம்மாதிரியான பெரும்பாலான படங்களில், ஒரு முகமூடி அணிந்த, ‘ஜோரோ’ போன்ற தோற்றத்தில் மேரி தோன்றினார். ஏழை, எளிய மக்களுக்காகப் போராடுபவராகவும், நீதி, உண்மையைக் காக்க உழைப்பவராகவும் அவரது கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன.

தனது திரைவாழ்வின் தொடக்கத்தில், ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி தன் பெயரை ‘நடியா’ என மாற்றிக்கொண்டார் மேரி. ஆனால் பிற்பாடு அவர், ‘பியர்லெஸ் நடியா’ என்றும் ‘ஸ்டன்ட் குயின் ஆப் இண்டியா’ என்றும் குறிப்பிடப்பட்டார்.

மொத்தம் 55 படங்களில் நடித்த நடியா, 1961-ம் ஆண்டு சினிமாவில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது அவர், தன்னுடன் திரையுலகில் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியவரும் இயக்குனருமான ஹோமி வாடியாவை திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, தனது 88-வது வயதில் மும்பையில் ஒரு மருத்துவமனையில் காலமானார் மேரி ஈவான்ஸ்.

ஆனால், அந்தக் கால ஆக்‌ஷன் பட பிரியர்களின் மனதில் இன்றும் இவர் வாழ்கிறார்.

Next Story