சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, தமிழ் திரையுலகில், இப்போது ‘மார்க்கெட்’டில் இருக்கும் கதாநாயகிகளில் துணிச்சல் மிகுந்தவர் யார்? (பி.விஜயகுமார், சென்னை–20)

திரிஷா! சண்டை காட்சிகளில் ‘டூப்’ போட அனுமதிக்கமாட்டார். அவரே நடிப்பார். ‘பங்கி ஜம்ப்’ போன்ற விபரீத விளையாட்டுகளில் எந்த தயக்கமும் இல்லாமல், துணிச்சலுடன் கலந்துகொள்வார். படப்பிடிப்புக்கு (அது வெளிநாடாக இருந்தால் கூட) தனியாக வந்து போகிறார்!

***

விமலும், ஓவியாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (எம்.பொன்னுதுரை, துறையூர்)

இருவரும் இணைந்து நடித்த ‘களவாணி–2’ படம் இப்போதுதான் திரைக்கு வந்து இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பொருத்து இருவரும் மீண்டும் இணைவார்கள்!

***

குருவியாரே, பூர்ணிமா பாக்யராஜ் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றது போல், ‘சின்னத்திரை’யிலும் வெற்றி பெறுவாரா? (ஆர்.புவனேஷ், காஞ்சிபுரம்)

‘சின்னத்திரை’ ரசிகர்–ரசிகைகள் மத்தியில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதனால் தொடர்ந்து ‘சின்னத்திரை’ தொடர்களில் நடிக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம்!

***

கீர்த்தி சுரேஷ் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (டி.ஜவகர், வேலூர்)

கீர்த்தி சுரேசின் சம்பளம் ரூ.1 கோடியை தாண்டி விட்டதாம்!

***

குருவியாரே, சிவகார்த்திகேயனுக்கும், விஜய்சேதுபதிக்கும் இடையே போட்டி இருப்பது உண்மையா? (ஜி.கோபால், திருச்சி)

இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்து வருகிறது. ஆனால், பொறாமை கிடையாது.

***

ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா ஆகிய இரண்டு பேரில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்? (எல்.சாமிநாதன், நாகர்கோவில்)

பிரியங்கா சோப்ராவை விட, ஐஸ்வர்யாராய் பல மடங்கு அதிக சம்பளம் வாங்கி வருகிறார்!

***

குருவியாரே, மும்தாஜை இப்போதெல்லாம் படங்களில் பார்க்க முடிவதில்லையே...ஏன்? (ஆர்.பாண்டியராஜன், டி.கல்லுப்பட்டி)

அடிக்கடி பார்த்தால், மும்தாஜ் மீதான மோகம் போய்விடுமாம். அதனால் படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறாராம்!

***

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பவர் யார்? படத்தில் அவருக்கு ஜோடி யார்? (எஸ்.ஏழுமலை, பொன்மலை)

‘இன்று நேற்று நாளை–2’ படத்தின் கதாநாயகன், விஷ்ணு விஷால். இவருக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!

***

குருவியாரே, ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயாவையும், ‘புன்னகை இளவரசி’ சினேகாவையும் இணைந்து நடிக்க வைத்தால், இருவருக்கும் என்ன வேடங்கள் கொடுக்கலாம்? (இரா.உமா மகேஸ்வரன், கும்மிடிப்பூண்டி)

கே.ஆர்.விஜயாவை அழகான அம்மா வேடத்திலும், சினேகாவை வசீகர மகள் வேடத்திலும் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும்!

***

தமிழ் பட உலகுக்கும், தெலுங்கு பட உலகுக்கும் என்ன வேறுபாடு என்று கூற முடியுமா? (கோ.ராஜாராம், திருக்கோவிலூர்)

தமிழ் பட உலகை விட, தெலுங்கு பட உலகம் பரந்து விரிந்தது. இங்கே கதாநாயகர்கள்–கதாநாயகிகள் அனைவரும் சாப்பாடு வி‌ஷயத்தில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பார்கள். தெலுங்கு பட உலகில், உணவு கட்டுப்பாடு கிடையாது. தமிழ் பட உலகை விட, தெலுங்கு பட உலகில் சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்களாம்!

***

குருவியாரே, பிற கதாநாயகிகள் அனைவரும் கவர்ச்சியாக நடிப்பதை குறைத்துக் கொள்ளும்போது, சமந்தா மட்டும் படுகவர்ச்சியாக நடித்து வருகிறாரே... எப்படி? (முரளி, பண்ருட்டி)

நடிப்பை, நடிப்பாக மட்டும் பார்க்கிறாராம் சமந்தா. அவருடைய கணவர் நாக சைதன்யாவும் அந்த கோணத்திலேயே பார்க்கிறாராம். இருவரும் இப்படியே இருந்து விட்டால், ரசிகர்களுக்கு கொழுத்த வேட்டைதான்!

***

விஜய் சேதுபதி சமீபகால படங்களில் கொஞ்சம் சறுக்குகிற மாதிரி தெரிகிறதே...? (ஏ.ஜார்ஜ், நாசரேத்)

மாதிரி அல்ல...சறுக்கல்தான்...ஆனாலும் அந்த சறுக்கலை சரி செய்து விஜய் சேதுபதி வெற்றிகரமாக எழுந்து நிற்பாராம்!

***

குருவியாரே, அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர், காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் அவர் நடித்து சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறார்? (என்.ரவிசங்கர், பெங்களூரு)

காஜல் அகர்வால் இங்கே சம்பாதித்து, மும்பையில் முதலீடு செய்கிறார். மும்பையில் அவருக்கு சொந்தமாக நகைக்கடை இருக்கிறது. சமீபகாலமாக காஜல் அகர்வால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அந்த கடையில்தான் முதலீடு செய்கிறாராம்!

***

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரும் அந்த காலத்தில் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள்? (கே.சேதுராமன், வந்தவாசி)

சிவாஜியை விட, எம்.ஜி.ஆர். ஒரு லட்சம் அதிக சம்பளம் வாங்கினாராம்! சிவாஜி ரூ.2 லட்சம் வாங்கினால், எம்.ஜி.ஆர். ரூ.3 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது!

***

குருவியாரே, டி.ராஜேந்தர் கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டார் என்று கூறுவார்கள். அவருக்கு நேர்மாறாக கதாநாயகிகளை கட்டிப்பிடித்து மிக நெருக்கமாக நடிக்கும் இளைய தலைமுறை நாயகன் யார்? (எச்.முகமது காசிம், தாம்பரம்)

அவருடைய மகன் சிம்பு! (ஒரு முன்னணி கதாநாயகியின் உதட்டை ஜவ்வு மிட்டாய் போல் கடித்து இழுத்தது, உதாரணம்!)

***

சரத்குமார் நடித்த படங்களில், அவருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படங்கள் எவை? (ஜெகநாதன், ஆவடி)

நம்ம அண்ணாச்சி, நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா!

***

குருவியாரே, நடிகர் பிரபுதேவா, டைரக்டர் பிரபுதேவா ஆகிய இருவரில், ரசிகர்கள் மத்தியில் யாருக்கு அதிக வரவேற்பு? (சோ.விஜயராஜ், மதுரை)

நடிகராக தமிழ் ரசிகர்களால் மட்டும் வரவேற்கப்பட்ட பிரபுதேவா, டைரக்டராக தமிழ், இந்தி ஆகிய 2 மொழி ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டார். ஆக, டைரக்டர் பிரபுதேவாவுக்கே அதிக ஓட்டு!

***

விஜயலலிதா, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சிலுக்கு சுமிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகிய கவர்ச்சி நடிகைகளில், யாருக்கு அதிக ரசிகர்கள்? (பி.சவுந்தர்ராஜன், ஸ்ரீரங்கம்)

பிரபல கதாநாயகிகளை விட, அதிக ரசிகர்களை சம்பாதித்தவர், சிலுக்கு சுமிதா!

***

குருவியாரே, கோவை சரளாவுக்கு சொந்த ஊர் எது? (ஜி.மார்த்தாண்டன், வள்ளியூர்)

அவர் பெயரிலேயே இருக்கிறது, சொந்த ஊர்!

***

சிம்ரன் மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டாரே...அவருக்கு என்ன வேடம் கொடுத்தால், பிரகாசமாக தெரிவார்? (எம்.செல்வ முருகன், சேலம்)

‘மும்பை அழகி’ வேடம் கொடுத்தால், பிரகாசமாக தெரிவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள்!

***