உயரமான நடிகையும்.. குள்ளமான நடிகரும்.. : (ஒரு ஜாலியான கலாட்டா)


உயரமான நடிகையும்.. குள்ளமான நடிகரும்.. : (ஒரு ஜாலியான கலாட்டா)
x
தினத்தந்தி 28 July 2019 6:50 AM GMT (Updated: 28 July 2019 11:01 AM GMT)

நடிகை ஸ்வேதா மேனன் 174 செ.மீ. அளவுகொண்ட உயரமான நடிகை. அவ்வப்போது ஏதாவது விமர்சனத்திற்கும் உள்ளாகிறவர்.

டிகை ஸ்வேதா மேனன் 174 செ.மீ. அளவுகொண்ட உயரமான நடிகை. அவ்வப்போது ஏதாவது விமர்சனத்திற்கும் உள்ளாகிறவர். ஆனால் துணிச்சலான நடிகை. ‘களிமண்’ என்ற சினிமாவில் பெண்மையின் உண்மைகளை வெளிக்காட்ட, தனது பிரசவத்தையே படமாக்க அனுமதித்தவர். நடிகர் கின்னஸ் பக்ரு உயரம் குறைந்த நடிகர். தென்னிந்தியாவில் நிறைய ரசிகர்களை பெற்றிருப்பவர். இவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மரியாதை கொண்ட நெருக்கமான நண்பர்கள்.

கின்னஸ் பக்ரு பள்ளியில் படிக்கும்போது ‘பேன்சி டிரஸ்’ என்னும் மாறுவேடப்போட்டியில் குரங்கு வேடத்தில் தோன்றியிருக்கிறார். ஸ்வேதா மேனன் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது மரம் போன்று வேடமணிந்து மேடை ஏறியிருக்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இப்போது கூடுதலாக ஒரு பொருத்தம் என்னவென்றால் பக்ரு, ‘பேன்சி டிரஸ்’ என்ற சினிமாவை தயாரிக்கிறார். அதன் கதாநாயகி ஸ்வேதா மேனன். இருவருக்கும் இடையே நடந்த ஜாலியான கலந்துரையாடல்:

பக்ரு: ஸ்வேதாவிடம் எனக்கு பிடித்த குணம், சிரிப்பு. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். சில நேரங்களில் நான் தமாஷை சொல்லி முடிக்கும் முன்பே சிரித்துவிடுவீர்கள். ஸ்வேதாவின் அழகு ரகசியமும் அந்த சிரிப்புதானே?

ஸ்வேதா: நான் சிறுவயதில் இருந்தே அப்படித்தான். சாதாரண விஷயத்திற்கும் சிரித்துவிடுவேன். அதுபோல் கோபமும் எனக்கு வரும். எப்போதும் மனதில் நேர் மறையான சிந்தனை இருந்துகொண்டிருக்க சிரிப்பு உதவும். அது சரி.. உங்களுக்கு சினிமா தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வர என்ன காரணம்?

பக்ரு: நடிப்பது எனக்கு எளிதான வேலை. ஆனால் பணத்தை முதலீடு செய்யும்போது அதற்குரிய டென்ஷனும் ஏற்படும். சினிமா தயாரிப்பில் என்னோடு சில நண்பர்களும் இணைந்திருக்கிறார்கள். பண விஷயங்களை எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் என்னால் முடியாது என்று மற்றவர்கள் நினைப்பதை எல்லாம் நான் செய்துமுடிப்பேன். அதற்காகத்தான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன்.

ஸ்வேதா: நான் ஒரு உண்மையை சொல்கிறேன். உங்களிடம் பழகுவதற்கு முன்னால் குள்ளமானவர்களை பற்றி என் கருத்தே வேறுமாதிரி இருந்தது. சமூகத்தில் நமக்கு அப்படித்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள். உங்களை சந்தித்த பின்பு அந்த கருத்தே மாறிவிட்டது. நீங்கள்தான் இந்த உலகத்தில் மிக அழகான ஆத்மாக்கள்.

பக்ரு: நீங்கள் 174 செ.மீ. உயரம். அதிகமான உங்கள் உயரத்தால் எப்போதாவது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதா?

ஸ்வேதா: தலை குனிந்து நில். ஏன் தலை நிமிர்ந்து நிற்கிறாய். தலை நிமிர்ந்து நிற்பதால்தான் நீ உயரமாக தெரிகிறாய், என்றெல்லாம் பலவாறு சொல்லியிருக்கிறார்கள். நான் உயரமாக இருப்பதால் எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டு நிற்க முடியுமா?

பக்ரு: உங்களுக்கு உயரத்தால் பிரச்சினை. நான் குள்ளமாக இருப்பதால் எனக்கு சிரிக்கும் விஷயங்களும் உண்டு. கவலைப்படும் விஷயங்களும் உண்டு. ஒருமுறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது யூனிவர்சல் ஸ்டூடியோவில் என்னை எந்த ராட்டினத்திலும் ஏற அனுமதிக்கவில்லை. வட்டம் சுற்றிய குதிரையிலும், எலக்ட்ரிக் காரிலும்தான் விளையாட அனுமதித்தார்கள். குழுவாக செல்பி எடுக்கும்போதும் என்னை யாராவது தூக்கிவைத்துக்கொள்ள வேண் டியதிருக்கிறது.

ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணு என்று எனக்கு தெரியும். ஆனால் பலரும் உங்களை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்கிறார்களே?

ஸ்வேதா: அதற்கு முக்கிய காரணம். நான் களிமண் படத்தில் என் பிரசவத்தை படமாக்க அனுமதித் ததுதான். ஆனால் இதுவரை யாரும் என்னிடம் அதுபற்றி நேரடியாக கேள்வி எழுப்பியதில்லை. மறைவாக நின்றுதான் அதுபற்றி பேசுகிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் மிக சிறந்தது அது. என் கணவரின் முழு சம்மதத்தோடுதான் நான் அதற்கு அனுமதித்தேன். இப்போதும் அதில் ஒரு காட்சி என் நினைவில் நிற்கிறது. என் குழந்தை வெளியேவந்ததை படம் பிடித்து முடித்ததும் டைரக்டர் பிளஸ்சி கண்ணீர்விட்டு அழுதுவிட்டார். அதனால் என் கணவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவராகிவிட்டார். களிமண் படம் வெளிவந்த பின்பு தான் கேரளாவில் பல மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது கணவரையும், குடும்பத்தாரையும் பிரவச அறைக்குள் நிற்க அனுமதித்தார்கள். அதன் மூலம் எந்த குழந்தைக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் என் மகள் ஷபைனாவுக்கு கிடைத்தது. எப்போதும் நினைவில் வைத்திருக்க அவளுக்கு நான் அளித்த பரிசு அது. ஒரு தாயின் உண்மையான வலியை எல்லோரும் உணரவேண்டும் என்பதற்காக நான் அந்த காட்சியில் நடித்தேன். ஆனால் இதயமில்லாதவர்கள் வேறுமாதிரியாக அதை பற்றி பேசினார்கள்.

நீங்கள் உங்கள் மனைவியோடு சண்டை போடுவீர்களா?

பக்ரு: சண்டை உருவாகும் அளவுக்குரிய சூழ் நிலைகளை என் மனைவி உருவாக்கமாட்டார். என் குடும்பத்தினர் எப்போதுமே என்னை மதிப்பார்கள். திருமணத்திற்கு பிறகு என் மனைவி அதைவிட அதிக மரியாதை தருகிறார். எங்கள் திருமணம் ரொம்ப வித்தியாசமானது. என் அம்மா, அவருக்கு தெரிந்தவரிடம் எனக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் காயத்ரி வீட்டில் போய் எனக்கு பெண் பார்க்கும் விஷயத்தை கூறியிருக்கிறார். அப்போது காயத்ரி, ‘நான் அவரை கல்யாணம் செய்துகொள்கிறேனே!’ என்று சொன்னாராம். அப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது. 13 வருடங்களாக மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை நடத்துகிறோம்.

ஸ்வேதா: உங்கள் வாழ்க்கையில், அம்மாவின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்ததல்லவா?

பக்ரு: ஆம். ஆனால் இப்போதும் என் அம்மாவிற்கு எனக்கு ஒரு அரசாங்க வேலை கிடைக்காமல் போய்விட்டதே என்ற கவலை இருக்கிறது. நான் நடிகனான பிறகும், ‘உனக்கு அதெல்லாம் சரிப் படாது. நீ அரசாங்க வேலைக்கு போ..’ என்றார். அதற்காக நான் ஒரு பரீட்சை எழுதினேன். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றதும், என்னை இன்டர்வியூவுக்கு அழைத்தார்கள். அப்போது அம்மாவும் என்னுடன் வந்தார். நான் அம்மாவை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே போனேன். அங்கிருந்தவர்கள், ‘உங்களுக்கு நடிக்கிற நல்ல வேலை இருக்கிறது. அதைவிட்டுவிட்டு இங்கே ஏன் வருகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘சார் எனக்கும் நடிக்கத்தான் ஆசை. என் அம்மாவின் நிர்பந்தத்தால் இங்கு வந்திருக்கிறேன். தயவு செய்து, நான் இன்டர்வியூவில் தோற்றுவிட்டேன்’ என்று அம்மாவை அழைத்து சொல்லிவிடுங்கள் என்றேன். அவர்களும் சொன்னார்கள். அதோடு அந்த பிரச்சினை முடிந்தது.

Next Story