மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதை: நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் ‘மெய்’ 23-ந் தேதி வெளியாகிறது


மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதை: நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் ‘மெய்’ 23-ந் தேதி வெளியாகிறது
x
தினத்தந்தி 19 Aug 2019 10:54 PM GMT (Updated: 19 Aug 2019 10:54 PM GMT)

நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘மெய்’ படம் 23-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதையாகும்.

சென்னை,

சுந்தரம் புரொடக்சன்ஸ் சார்பில், ராம் சுந்தரம், பிரீத்தி கிருஷ்ணா ஆகியோர் தயாரித்து உள்ள படம் ‘மெய்’. இதில் கதாநாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகமாகி உள்ளார். இவர் புகழ்பெற்ற டி.வி.எஸ்.சுந்தரம் குடும்பத்தை சேர்ந்தவர். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். கிஷோர், சார்லி, அஜய்கோஷ், ராம்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளனர்.

இந்த படத்தை எஸ்.ஏ.பாஸ்கரன் டைரக்டு செய்து உள்ளார். படக்குழுவினர், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, தயாரிப்பாளர் பிரீத்தி கிருஷ்ணா பேசியதாவது:- படம் தயாரிக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவாக இருந்தது. நல்ல கதை அமைந்தால், படம் எடுக்கலாம் என்று நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் ‘மெய்’ படத்தின் கதை இருந்தது. சமூகத்துக்கு நல்ல கருத்து சொல்லும் விஷயங்களும் கதைக்குள் இருந்தன.

எனவே இந்த படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரபல நடிகர்கள் பலர் இதில் நடித்து உள்ளனர். புது முகங்களும் இருக்கிறார்கள். இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்பார்கள். வருகிற 23-ந் தேதி ‘மெய்’ படம் திரைக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சார்லி பேசியதாவது:- ‘மெய்’ நல்ல படமாக வந்துள்ளது. திறமையான இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தை உருவாக்கி உள்ளார். படத்தில் நிறைய பிடித்த அம்சங்கள் உள்ளன. இதில், கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ள நிக்கி சுந்தரம் திறமையானவர்.

கடின உழைப்பும், சினிமாவை நேசிக்கும் தன்மையும் அவரிடம் இருந்தது. ஒரு காட்சியில் நடித்த பிறகு மீண்டும் நடிக்க வேண்டுமா? என்று கேட்டு ஆர்வத்தோடு நடித்தார். அவர் சிறந்த நடிகராக வருவார். ‘மெய்’ படம் உலகமே பாராட்டும் பெரிய படமாக அமையும்.  இவ்வாறு அவர் பேசினார்.

டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன் பேசியதாவது:- நான் இயக்குனர் சித்திக்கிடம் நிறைய படங்களில் பணியாற்றி உள்ளேன். சுரேஷ் பாலாஜி ‘மெய்’ படத்தின் கதையை கேட்டு, படமாக எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் பிரீத்தி கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தான் ‘மெய்’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.

இந்த படம் மருத்துவத்தை பற்றிய உண்மை சம்பவம். ஆஸ்பத்திரியில் நடக்கும் ஒரு மாபியாவை பற்றிய கதை. மருத்துவ திகில் படமாக உருவாகி உள்ளது. கமர்ஷியல் விஷயங்களும் படத்தில் உள்ளன. தரமான படமாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கதாநாயகன் நிக்கி சுந்தரம் பேசியதாவது:- நான் அமெரிக்காவில் படித்தேன். ஆனாலும், தமிழ் படங்கள் மீது ஆர்வம் இருந்தது. விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் படங்களையும் பார்த்து வளர்ந்தேன். கலையின் மீது இருந்த ஆர்வத்தால் நடிக்க வந்துள்ளேன். ‘மெய்’ படத்தின் கதையில், சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்கள் உள்ளன. எனவே தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு ஜோடியாக வருகிறார். இந்த படம், ரசிகர்களுக்கு பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “‘மெய்’ படம் மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை வெளிப்படுத்தும். நான் சாதாரண காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். ஆனால், எனக்கு ரூ.1 லட்சம் கட்டணம் வசூலித்தனர். அதே நேரம் நல்ல ஆஸ்பத்திரிகளும் உள்ளன. நிக்கி சுந்தரம் கஷ்டப்பட்டு நடித்தார். சண்டைக்காட்சிகளில் அடி பட்டாலும் பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தார்” என்றார்.

நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர் வி.என்.மோகன், கதாசிரியர் முருகேசன், எடிட்டர் பிரீத்தி மோகன், நடிகர் ஜார்ஜ், நிர்வாக தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்துக்கு பிரித்வி குமார் இசை அமைத்துள்ளார்.

Next Story