சினிமா செய்திகள்

புல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய் + "||" + The Pulwama attack Making Vivek Oberoi

புல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்

புல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்
புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இதில் விவேக் ஓபராய் நடிக்கிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகளும் கண்டித்தன. தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றது.


பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமை குண்டு வீசி அழித்து தரை மட்டம் ஆக்கியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இதில் விவேக் ஓபராய் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்குகிறது. பாகிஸ்தான் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது.

இந்த படம் குறித்து விவேக் ஓபராய் கூறும்போது, “நமது படையினரின் வீரத்தை போற்றவேண்டியது ஒரு இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்களின் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளிப்படும். பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது. அபிநந்தன் இந்தியர்களுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். இந்த படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பேன்” என்றார்.