தொழில் அதிபர் கொலைமிரட்டல் புகார்: ‘பிக்பாஸ்’ நடிகை மீரா மிதுன் கைதாவாரா? எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


தொழில் அதிபர் கொலைமிரட்டல் புகார்: ‘பிக்பாஸ்’ நடிகை மீரா மிதுன் கைதாவாரா? எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 Aug 2019 11:30 PM GMT (Updated: 27 Aug 2019 8:43 PM GMT)

தொழில் அதிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த புகாரில், ‘பிக்பாஸ்’ நடிகை மீராமிதுன் மீது எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இவருக்கு ‘முக-நூல்’ மூலம் எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஜோமைக்கேலுடன் கடந்த 2017-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

நண்பர்களாக பழகி வந்த இவர்களிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண பிரச்சினையால் மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மாறி, மாறி போலீசில் புகார் அளித்தனர். இந்த பிரச்சினைகளுக்கு இடையே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மீரா மிதுன் சென்றார். ஜோமைக்கேல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு நேரில் சென்று மீரா மிதுனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கொலைமிரட்டல்

இந்தநிலையில் ஜோமைக்கேலுக்கு மீரா மிதுன் கொலைமிரட்டல் விடுத்து பேசியது போன்று செல்போன் உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதுதொடர்பாக ஜோமைக்கேல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது ஆபாசமாக திட்டுதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சம்மன் அனுப்பி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் மீரா மிதுன் கைது செய்யப்படுவாரா? என்பது தெரிய வரும்.

தொடரும் சர்ச்சை

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் 2016-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ அழகி பட்டத்தை வயதை குறைத்து பெற்றதாக எழுந்த புகாரில், அந்த பட்டம் பறிக்கப்பட்டது. அவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி மாடல் பெண்களிடம் பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

Next Story