கேரளாவில் சூர்யாவின் ‘காப்பான்’ படத்துக்கு தடை?


கேரளாவில் சூர்யாவின் ‘காப்பான்’ படத்துக்கு தடை?
x
தினத்தந்தி 30 Aug 2019 12:42 AM GMT (Updated: 30 Aug 2019 12:42 AM GMT)

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தை அடுத்த மாதம் 20-ந்தேதி கேரளாவில் 200 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

கேரளாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால் என்று அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களையும் அங்கு திரையிட்டு நல்ல வசூல் பார்க்கின்றனர். விஜய் படங்களை 225 தியேட்டர்கள் வரை திரையிடுகின்றனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தை அடுத்த மாதம் 20-ந்தேதி கேரளாவில் 200 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை கேரளாவில் வினியோகம் செய்த டோமிசன் முளகுபாடம் என்பவர் ‘காப்பான்’ படத்துக்கு எதிராக கேரள வினியோகஸ்தர் சங்கத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் “கேரளாவில் 2.0 படத்தை திரையிட்டதில் தனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட காப்பான் படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த உரிமையை கொடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்த கேரள வினியோகஸ்தர் சங்கம் டோமிசனுக்கு வினியோக உரிமையை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளதாகவும் அதை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காப்பான் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Next Story