கால்பந்தை களமாக கொண்டு சுசீந்திரனின் பழிவாங்கும் கதை


கால்பந்தை களமாக கொண்டு சுசீந்திரனின் பழிவாங்கும் கதை
x
தினத்தந்தி 30 Aug 2019 10:58 AM GMT (Updated: 30 Aug 2019 10:58 AM GMT)

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் டைரக்டரான சுசீந்திரன், அந்த படத்தில் கபடி விளையாட்டை கதைக்களமாக வைத்திருந்தார்.

சமீபத்தில் சுசீந்திரன் டைரக்டு செய்து திரைக்கு வந்த ‘கென்னடி கிளப்’ படத்திலும் கபடி விளையாட்டையே கதைக்களமாக வைத்திருந்தார். அடுத்து அவர் கால்பந்து விளையாட்டை கதைக் களமாக வைத்து, ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.

இந்த படத்துக்கு அவர், ‘சாம்பியன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். படத்தின் கதை-திரைக் கதை-டைரக்‌ஷன் பொறுப்புகளை அவர் கவனிக்கிறார். விவேகா பாடல்களை எழுத, அரோல் கரொலி இசையமைக்கிறார். கே.ராகவி தயாரிக்கிறார்.

விஷ்வா, ‘அஞ்சாதே’ நரேன், மனோஜ் பாரதி, மிருனாளினி, ஸ்டண்ட் சிவா, வாசுகி, ராட்சசன்’ வினோத், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ராமன் விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் சுசீந்திரன் கூறியதாவது:-

“சாம்பியன், வட சென்னையை கதைக்களமாக கொண்ட படம். கால்பந்து விளையாட்டை கருவாக வைத்து இருக்கிறேன்.

ஒரு மனிதன் வெற்றியாளனாக ஆவதற்குள் அவன் என்னென்ன பிரச்சினைகளை, இழப்புகளை சந்திக்கிறான்? என்பதே இந்த படத்தின் மையக்கருத்து. ‘நான் மகான் அல்ல,’ ‘பாண்டிய நாடு’ படங்களைப் போல் இதுவும் ஒரு பழிவாங்கும் கதை.” 

Next Story