சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள்.. + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்..

குருவியார் கேள்வி-பதில்கள்..
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, கார்த்தி நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம் எது, அந்த படத்தில் அவருக்கு ஜோடி யார், டைரக்டர் யார், படம் எப்போது திரைக்கு வரும்? (பி.ஜெயகணேஷ், சென்னை–1)

கார்த்தி நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘கைதி.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. படத்தை டைரக்டு செய்பவர், லோகேஷ் கனகராஜ். படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வரும்!

***

15 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா, திரையுலகில் சாதித்தது என்ன? (ஜி.கோபால், திருச்சி)

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. 15 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். 15 வருடங்களாக உடல் எடை கூடாமல் ஒல்லியாக இருப்பது, இன்னொரு சாதனை. காதல் வலையில் அவ்வப்போது சிக்குவார்...பிறகு அதில் இருந்து புத்திசாலித்தனமாக வெளியே வந்து விடுவார். இதெல்லாம் திரிஷாவின் சாதனைகள்!

***

குருவியாரே, விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? இப்போது நடித்து வரும் படம் எது? (ஏ.திருமுருகன், சேலம்)

சண்முக பாண்டியன், ‘சகாப்தம்,’ ‘மதுரை வீரன்’ ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது, ‘மித்ரன்’ என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

குழந்தைகளை கவரும் வகையில், சமீபத்தில் ஏதாவது ஒரு படம் திரைக்கு வந்து இருக்கிறதா? (எஸ்.ஏ.அரவிந்த், புதுச்சேரி)

‘தி லயன் கிங்’ என்ற ஆங்கில படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. குழந்தைகளுக்காகவே தயாரான படம், இது!

***

குருவியாரே, நயன்தாராவின் சொந்த பெயர் என்ன? அவர் எந்த ஊரில், எந்த வருடம் பிறந்தார்? இதுவரை எத்தனை விருதுகள் வாங்கியிருக்கிறார்? (கே.ஸ்ரீதரன், காஞ்சீபுரம்)

நயன்தாராவின் சொந்த பெயர், ‘டயானா மரியம் குரியன்.’ அவர் 1984–ம் ஆண்டில், நவம்பர் மாதம் 18–ந்தேதி, பெங்களூருவில் பிறந்தார். இதுவரை அவர், ‘கலைமாமணி விருது,’ தமிழக அரசின் சிறந்த நடிகை விருது, ஆந்திர அரசின் நந்தி விருது ஆகிய 3 விருதுகளை வாங்கியிருக்கிறார்!

***

நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய மூன்று தரப்பினர் மீதும் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, ஏதாவது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரா? (வி.ரவீந்திரசிங், திண்டுக்கல்)

ஸ்ரீரெட்டியை வைத்து, ‘ஸ்ரீரெட்டியின் டைரி’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. அதில் அவர்தான் கதாநாயகி. முக்கால்வாசி படம் முடிவடைந்து விட்டது. இன்னும் 6 நாட்கள்தான் ‘சூட்டிங்’ பாக்கியிருக்கிறது என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, ஓவியா, ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறார்? (ஆர்.சந்தோஷ், ஊட்டி)

ஓவியா, ஒரு படத்துக்கு ரூ.1 கோடி கேட்கிறார். 75 லட்சம் கொடுத்தால், மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாராம்!

***

திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்–மனைவி போல் ஒரே வீட்டில் தங்கியிருந்து காதல் வளர்த்து வரும் நடிகர்–நடிகைகள் யார்–யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

திருமணம் செய்து கொள்ளாமல் கணவர்–மனைவி போல் ஒரே வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தும் நட்சத்திரங்கள், ஒரு சிலர்தான். அவர்களில் ஒருவர், புகழ் பெற்ற நடிகை. இவர் திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு டைரக்டருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வருகிறார். பழம்பெரும் நடிகை ஒருவரும் இந்த பட்டியலில் இருக்கிறார்!

***

குருவியாரே, சிம்பு திருமணம் பற்றி ‘லேட்டஸ்ட்’ தகவல் இருக்கிறதா? (எஸ்.அமீர், கோவை)

மணமகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சிம்புவிடமே அவருடைய பெற்றோர்கள் ஒப்படைத்து விட்டார்களாம். தனக்கு சரியான ஜோடியை சிம்பு தேர்வு செய்து, மிக விரைவில் அறிவிப்பாராம்!

***

இப்போது உள்ள கல்வி முறை பற்றியும், நீட் தேர்வு குறித்தும் கருத்து சொன்ன ஜோதிகா அரசியலுக்கு வருவாரா? (கே.ராஜ்குமார், விருத்தாசலம்)

கல்வி முறை பற்றி கருத்து சொல்பவர்கள் அனைவரும் அரசியலுக்கு வந்தால், பெரும் கூட்டம் சேர்ந்து விடும். ஜோதிகாவுக்கு நடிப்பதில் மட்டுமே ஆர்வம்...அரசியலில் இல்லை!

***

குருவியாரே, கடந்த மூன்று மாதங்களில் திரைக்கு வந்த படங்களில் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எது? அதில் கதாநாயகன்–கதாநாயகி யார்–யார்? (பி.அன்பழகன், ஜோலார்பேட்டை)

படம்: நேர்கொண்ட பார்வை.’ கதாநாயகன் அஜித்குமார். கதாநாயகி வித்யாபாலன்!

***

‘‘வானமென்னும் வீதியிலே குளிர் வாடை என்னும் தேரினிலே...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (த.புகழேந்தி, கூகூர்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘அன்னை வேளாங்கண்ணி.’ அதில் நடித்தவர், ஜெயலலிதா!

***

குருவியாரே, இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் சல்மான்கானா, அக்‌ஷய்குமாரா? (டி.மனோகரன், கொரட்டூர்)

சல்மான்கானை விட, அக்‌ஷய்குமார் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்!

***

நடிகர்–டைரக்டர் சமுத்திரக்கனியின் சொந்த ஊர் எது, சமுத்திரக்கனி என்பது அவருடைய சொந்த பெயரா, புனைப்பெயரா? அவரிடம் உள்ள பாராட்டுக்குரிய சுபாவம் என்ன? (விடுதலை செல்வன், கூடலூர்)

சமுத்திரக்கனி என்பது அவருடைய சொந்த பெயர்தான். சொந்த ஊர், ராஜபாளையம். எல்லோருக்கும் நண்பனாக–சகோதரனாக இருப்பது, பாராட்டுக்குரிய சுபாவம்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடிப்பில் ‘திலகம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். ‘நடனத்தில் அவர் எப்படி? (ஆர்.கோபி, ஈரோடு)

நடனத்திலும் அவர், ‘திலகம்’தான். அதற்கு உதாரணம்: உத்தமபுத்திரன், என் தம்பி, தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா, நீதி, என் மகன், வசந்த மாளிகை ஆகிய படங்கள்!

***

தமன்னா தங்க நிறத்தழகி என்பதை ரசிகர்கள் அறிவார்கள். அவரிடம் உள்ள குணநலன்கள் பற்றி கூற முடியுமா? (இரா.பன்னீர்செல்வம், பூந்தமல்லி)

சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்ற வேறுபாடு பார்க்காமல், கதாநாயகர்கள் அனைவருடனும் அன்பாக பழகுவது, ‘தமன்னா ஸ்பெ‌ஷல்!’

***

குருவியாரே, மஞ்சுவாரியர், தமிழ் பட உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பாரா? (எஸ்.டி.கதிர், தேனி)

மஞ்சுவாரியருக்கு குடும்பப்பாங்கான தோற்றம் இருப்பதால், தமிழ் பட உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்!

***

அப்பா வேடத்துக்கு வந்துவிட்ட முன்னாள் கதாநாயகர்கள் யார்–யார்? (எம்.வெற்றிவேல், குன்றத்தூர்)

சத்யராஜ், பிரபு, பாக்யராஜ்!

***

தொடர்புடைய செய்திகள்

1. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார் குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:- குருவியார், தினத்தந்தி சென்னை-600007.