‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் தங்கர்பச்சான் மகன் நகைச்சுவை நாயகனாக அறிமுகம்


‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் தங்கர்பச்சான் மகன் நகைச்சுவை நாயகனாக அறிமுகம்
x
தினத்தந்தி 11 Oct 2019 1:30 AM GMT (Updated: 10 Oct 2019 4:02 PM GMT)

மிக சிறந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர்பச்சான், ‘அழகி,’ ‘பள்ளிக்கூடம்,’ ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உள்பட காலத்தால் அழிக்க முடியாத படங்களை கொடுத்து, தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்தவர். இவருடைய மகன் விஜித், கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கிராமத்து பின்னணியையும், அதன் யதார்த்தங்களையும் அழுத்தமாக பதிவு செய்த தங்கர்பச்சான், சென்னை நகரத்தை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்குகிறார். பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட கதாபாத்திரத்தில் காண்பித்த அவர், இந்த படத்தின் மூலம் மகன் விஜித்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வைத்து இருக்கிறார். முனீஸ்காந்த் கதாநாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். 70 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. மிலனா நாகராஜ், அஸ்வினி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் ஆகிய மூன்று பேரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.

பிரபு தயாளன், சிவபாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை தங்கர்பச்சான் ஏற்றுள்ளார். ஜார்ஜ் டயஸ் தயாரிக்கிறார்.

‘‘அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்று வறுமையில் வாடும் ஒரு இளைஞனுக்கும், பணம் இருந்தும் வாழ பிடிக்காத ஒரு தொழில் அதிபருக்கும் இடையே நடைபெறும் கதை இது. என் பாணியில் இருந்து மாறுபட்ட கதையம்சம் உள்ள இந்த படத்தில், எதிர்பாராத திருப்பங்களும், சண்டை காட்சி மற்றும் கார் துரத்தல் காட்சிகளும் இடம் பெறுகின்றன. இசையமைப்பாளர் தேவா பாடிய ஒரு பாடலும் இடம் பெறுகிறது’’ என்கிறார், டைரக்டர் தங்கர்பச்சான். 

Next Story