சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, விஜய் நடித்து சமீபகாலத்தில் வெளியான வேறு எந்த படத்துக்கும் ஏற்பட்டிராத எதிர்பார்ப்பும், வரவேற்பும் ‘பிகில்’ படத்துக்கு ஏற்பட்டுள்ளதே...என்ன காரணம்? (பி.ஜெயகணபதி, சென்னை–1)

‘பிகில்’ படவிழாவில் விஜய் வெளியிட்ட பரபரப்பான கருத்துகளே எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமானதற்கு காரணம். விஜய் பேச்சு காட்டுத்தீ போல் பரவியதால், ‘பிகில்’ கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது!

***

 தமிழ் பட கதாநாயகிகளில், போலீஸ் அதிகாரி வேடம் யாருக்கு பொருத்தமாக அமைந்தது? (வி.அர்ஜுன், காவேரிப்பாக்கம்)

போலீஸ் அதிகாரி வேடம் விஜயசாந்திக்கு பொருந்திய அளவுக்கு வேறு எந்த கதாநாயகிக்கும் பொருந்தவில்லை!

***

குருவியாரே, அஜித்குமார் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? அந்த படம் எப்போது திரைக்கு வரும்? (எஸ்.குமரன், கோவூர்)

அஜித்குமார் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும். அந்த படம், 2020–ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும்!

***

‘ஆடுகளம்’ படத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது போல், ‘அசுரன்’ படத்துக்காகவும் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்குமா? (கே.சீனிவாசன், ஸ்ரீரங்கம்)

‘அசுரன்’ படத்தில் தனுசின் மிக திறமையான நடிப்பு ஒட்டு மொத்த திரையுலகையும், ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறது. எனவே அவருக்கு 2–வது முறையாக தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது!

***

குருவியாரே, வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகிகளில், மிக சரளமாக தமிழ் பேசும் நடிகை யாராவது இருக்கிறார்களா? (ஆர்.லோகநாதன், வேலூர்)

‘கன்னக்குழி’ அழகி சிருஷ்டி டாங்கே மும்பையை சேர்ந்தவர் என்றாலும், மிக அழகாக தமிழ் பேசுகிறார்!

***

இன்றைய கதாநாயகர்களில் அஜித்குமார் மிக வேகமாக கார் ஓட்டுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவரைப்போல் கதாநாயகிகளில் அதி வேகமாக கார் ஓட்டுபவர் யார்? (ஜே.பிரான்சிஸ், பெங்களூரு)

கதாநாயகிகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவர், மீனா! பெண்களுக்கு கார் பந்தயம் வைத்தால், மீனா முதல் இடத்தை பிடித்து விடுவார்!

***

குருவியாரே, முன்னாள் நாயகியான ‘ஊர்வசி’ சாரதா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அவருடைய சொந்த ஊர் எது, இப்போது அவர் எங்கே வசிக்கிறார்? (எம்.சுந்தரவதனன், நாகர்கோவில்)

‘ஊர்வசி’ சாரதாவின் சொந்த ஊர், ஐதராபாத். என்றாலும், அவர் மலையாள படங்களில்தான் அதிகமாக நடித்தார். இப்போது அவர் வசிப்பது, சென்னையில்!

***

குருவியாரே, உதயநிதி ஸ்டாலின் அரசியலில் குதித்து விட்டாரே...அவர் இனிமேல் சினிமாவில் நடிப்பாரா? (இரா.தமிழ் செல்வன், தஞ்சை)

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் குதித்தாலும், ‘‘சினிமாவில் நடிக்க மாட்டேன்’’ என்று அவர் அறிவிக்கவில்லையே...அதனால் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

***

தமிழ் பட உலகில், எந்த எழுத்தாளரின் நாவல்கள் அதிகமாக படமாக்கப்பட்டுள்ளன? சினிமா கதை விவாதங்களில் அதிகமாக கலந்து கொண்டவர் யார்? அவரை கதை விவாதத்தில் கலந்து கொள்ள வைத்தவர் யார்? (வி.சுமதி, கரூர்)

சுஜாதாவின் நாவல்கள் அதிகமாக படமாக்கப்பட்டு உள்ளன. கதை விவாதங்களில் அதிகமாக கலந்து கொண்டவரும் அவர்தான். அவரை கதை விவாதங்களில் கலந்து கொள்ள வைத்தவர், டைரக்டர் ‌ஷங்கர்!

***

குருவியாரே, விஜய்யை முழுமையான ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக மாற்றிய முதல் படம் எது? அந்த படத்தை டைரக்டு செய்தவர் யார்? (மா.கோதண்டராமன், குளித்தலை)

விஜய்யை முழுமையான ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக மாற்றிய முதல் படம், ‘திருமலை.’ அந்த படத்தை டைரக்டு செய்தவர், ரமணா!

***

மஞ்சுவாரியர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பாரா? (ஏ.அகமது ஷெரீப், கோவை)

‘அசுரன்’ படம் பார்த்து விட்டு மஞ்சுவாரியருக்கு தமிழில் நிறைய புது பட வாய்ப்புகள் வருகின்றன. அவைகளில் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை அவர் தேர்வு செய்து நடிப்பாராம். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.

***

குருவியாரே, டைரக்டர் விக்ரமன் தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்வது எப்போது? (சி.தண்டபாணி, பருத்திப்பட்டு)

விரைவில்...அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

***

தமிழ் பட டைரக்டர்களில் மிக அதிக சம்பளம் வாங்குபவர் யார்? எந்த படத்தில்...? (என்.ரகுராம், தேனி)

தமிழ் பட டைரக்டர்களில் மிக அதிக சம்பளம் வாங்கியவர், ‌ஷங்கர். இவரை (சம்பள வி‌ஷயத்தில்) முருகதாஸ் முந்தி விட்டதாக கூறப்படுகிறது.

***

குருவியாரே, ஹன்சிகாவுக்கும், தன்சிகாவுக்கும் என்ன வித்தியாசம்? (ஆர்.ஜெயக்குமார், துரைப்பாக்கம்)

ஹன்சிகா, மும்பை அழகி. தன்சிகா, தமிழ் பெண். ஹன்சிகா, காதல் நாயகிக்கு பொருந்துவார். தன்சிகா, அடிதடி வேடங்களுக்கு பொருந்துவார்!

***

பட அதிபராக இருந்து வில்லன் நடிகராக மாறிய ஆர்.கே.சுரேஷ் அடுத்து கதாநாயகனாக நடிப்பாரா? (எம்.ரங்கநாதன், திருச்சி)

ஆர்.கே.சுரேஷ், அடுத்து 2 படங்களில் கதாநாயகனாக நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

***

குருவியாரே, ராய் லட்சுமி நடித்து அடுத்ததாக திரைக்கு வரும் படம் எது? (தங்கராஜா, பேராவூரணி)

ராய் லட்சுமி நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘சிண்ட்ரல்லா!’

***

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் வந்த பேய்(படங்களில்)களில், அதிகமாக பயமுறுத்திய பேய் எது, எந்த படத்தில்...? (ஸ்டீபன் பால்ராஜ், தூத்துக்குடி)

திரையுலக பேய்களில் அதிகமாக பயமுறுத்தி, இருதய துடிப்பை அதிகரிக்க செய்தது, ‘சந்திரமுகி’ பேய்தான். ஜோதிகா பயமுறுத்திய அளவுக்கு வேறு எந்த நடிகையும் பயமுறுத்தவில்லை!

***

குருவியாரே, ‘‘ஓடி ஓடி உழைக்கணும்...’’ என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? அந்த பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (கே.அசோக், சாத்தூர்)

அந்த பாடல் காட்சி இடம் பெற்ற படம், ‘நல்ல நேரம்.’ பாடலை பாடியவர், டி.எம்.சவுந்தரராஜன், பாடல் காட்சியில் நடித்தவர், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன்–‘நாட்டிய பேரொளி’ பத்மினி இணைந்து நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ மாதிரி ஒரு படம் மீண்டும் வருமா? (வி.ஏழுமலை, மதுரவாயல்)

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் போல் இன்னொரு நடிகர் பிறந்துதான் வரவேண்டும். அப்படி வந்தால், அதுபோன்ற ஒரு படத்தை எதிர்பார்க்கலாம்!

***

ஆசிரியரின் தேர்வுகள்...