நடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைக்க புதிய அமைப்பு?


நடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைக்க புதிய அமைப்பு?
x
தினத்தந்தி 21 Oct 2019 12:11 AM GMT (Updated: 21 Oct 2019 12:11 AM GMT)

நடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைக்க புதிய அமைப்பு, நடிகர் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதை இந்த அமைப்பு கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

திரைப்படங்களில் கதையின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வழங்கி வந்த ‘கேஸ்டிங் டைரக்டர்கள்’ எனப்படும் நடிப்பு இயக்குனர்கள் தென்னிந்தியாவில் ஒருங்கிணைந்து தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

நடிகர் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதை இந்த அமைப்பு கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன் கவுரவ ஆலோசகர்களாக இயக்குனர்கள் பாக்யராஜ், பிரபுசாலமன், நடிகை அர்ச்சனா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், டைமண்ட் பாபு ஆகியோரும் தலைவராக மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிபர் சுதர்சன், பொருளாளராக வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கலந்து கொண்டு பேசும்போது, “நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்காகவும், நடித்துக்கொண்டிருப்பவர்களுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது” என்றார்.

டைரக்டர் பாக்யராஜ் பேசும்போது, “இது சினிமாவுக்கு சேவை செய்யும் அமைப்பாக இருக்க வேண்டும். சினிமா, பல்வேறு கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. கலைஞர்கள் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அதுதான் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, அஸ்வின், அசோக், நடிகைகள் கவுதமி, நமீதா, தேஜாஸ்ரீ, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story