தாமதமாகும் ஜெயலலிதா வாழ்க்கை படம் இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கம்


தாமதமாகும் ஜெயலலிதா வாழ்க்கை படம் இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கம்
x
தினத்தந்தி 4 Nov 2019 12:22 AM GMT (Updated: 4 Nov 2019 12:22 AM GMT)

ஜெயலலிதா வாழ்க்கையை ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்குவதாக இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்தார்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனனையும் தேர்வு செய்தனர். ஆனாலும் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தாமதத்துக்கான காரணத்தை விளக்கி பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தி அயர்ன் லேடி படம் ஜெயலலிதாவின் முழு வாழ்க்கை கதையையும் உள்ளடக்கியது. ஜெயலலிதாவைப் போலவே முக அமைப்பு முதல் நிகரில்லா ஆளுமை திறன் வரை இயற்கையாகவே அவரது பண்புகளை நித்யாமேனன் கொண்டு இருப்பதால் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக இருக்கிறார் என்று தேர்வு செய்தேன்.

வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது சவாலான விஷயம். அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் படமாக்க முயன்று கொண்டு இருக்கிறேன். மக்கள் ஏற்கும் தரமான படைப்பாக கொடுக்க கடமைப்பட்டு உள்ளேன்.

சர் ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த படைப்பாக அமைய சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்கள் தேதிகளுக்காக காத்திருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story