சினிமாவின் பொற்காலம்


சினிமாவின் பொற்காலம்
x
தினத்தந்தி 13 Dec 2019 2:15 PM GMT (Updated: 13 Dec 2019 2:15 PM GMT)

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, 1960-கள் தான் என்றால் திரையுலக விமர்சகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். தமிழ் சினிமா என்று சொல்வதை விட தென்னிந்திய சினிமாவின் பொற்காலம் என்றுகூட சொல்லலாம். மொத்த தென்னிந்திய சினிமாவும் மெட்ராசில் (சென்னை) இருந்துதான் இயங்கிக்கொண்டிருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளைச் சேர்ந்த நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சென்னையில் வசித்தார்கள். அதுவும் தி.நகரில் அதிக அளவில் இருந்தார்கள்.

எங்கள் வீட்டின் பின் தெருவில் இருந்த மேக்கப்மேன் ஹரிபாபுவின் வீட்டில், காலை நான்கு மணியில் இருந்து பிரபலங்கள் மேக்கப்போட வந்துவிடுவார்கள். அன்றைய பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் அவர் வீட்டுக்கு வந்துதான் மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். திரையுலக பிரபலங்களை தி.நகரில் எப்போதும் பார்க்கலாம்.

அந்தக்கால சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைப் பார்ப்போம். தமிழில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, தெலுங்கில் என்.டி.ஆர்-நாகேஸ்வரராவ், மலையாளத்தில் சத்யன்-பிரேம் நசீர், கன்னடத்தில் ராஜ்குமார்-ஹொன்னப்ப பாகவதர் என்று மொழிக்கு இரண்டு சூப்பர்ஸ்டார்கள்.

அதே போல பாடலாசிரியர்களை எடுத்துக் கொண்டால், தமிழில் கண்ணதாசன், தெலுங்கில் ஆத்ரேயா, மலையாளத்தில் வயலார், கன்னடத்தில் உதயசங்கர். இவர்கள் அனைவருமே தங்கள் மொழியில், துறையில் கொடிகட்டிப் பறந்தவர்கள்.

ஆத்ரேயா, வயலார் போன்றவர்கள் கண்ணதாசனை மிக உயரத்தில் வைத்துப் பார்த்தவர்கள். தமிழில் வெளியான படத்தை தெலுங்கு மொழியில் தயாரிக்கும்போது, அதற்கு பாடல் எழுதுவதற்காக வரும் ஆத்ரேயா, தமிழ் படத்தில் இதே பாடலில் கண்ணதாசன் என்ன எழுதி இருக்கிறார் என்று கேட்டு தெரிந்துகொள்வாராம். அவருக்கு அப்பாவின் மீது இருந்த அன்பையும், மரியாதையையும் பற்றி ஒரு முறை நடிகர் சார்லி என்னிடம் சொன்னார்.

ஒருமுறை ஒரு திரைப்படத்திற்கான கதை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆத்ரேயாவை மிகவும் சிரமப்பட்டு அதற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். கதை விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது, ஒரு இடத்தில் இதே சூழலுக்கு கண்ணதாசன் இப்படி எழுதி இருக்கிறார் என்று சார்லி சொன்னாராம். அப்படி சொன்னவுடன் ஆத்ரேயா ‘விருட்’ என்று எழுந்து போய்விட்டார்.

அங்கிருந்த தெலுங்கு கதாசிரியர் “ஏன் சார்.. இவர்கிட்ட போய் அவர் பேரை சொன்னீங்க?, பாருங்க கிளம்பிப் போயிட்டாரு. அவரு டிஸ்கஷனுக்கு வர்றதே கஷ்டம். கெஞ்சி கூட்டிக்கிட்டு வந்தோம். எல்லாத்தையும் கெடுத்திட்டீங்களே” என்று வருத்தப்பட்டார்.

அவர் சொன்னது போலவே ஆத்ரேயாவை மீண்டும் கெஞ்சி மூன்று நாட்களுக்குப் பிறகு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆத்ரேயா அறைக்குள் வந்து அமர்கிறார். ஒரே நிசப்தம். கண்ணதாசன் பெயரை சொன்ன சார்லி, அவர் முகத்தில் படாதவாறு பின்னால் குனிந்து அமர்ந்திருக்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆத்ரேயா, அவர்கள் எல்லாரையும் பார்த்துவிட்டு “அன்னைக்கு யார் அதைச் சொன்னது?” என்று கேட்கிறார்.

‘ஆஹா, திரும்பவும் மாட்டிக்கிட்டோமா’ என்ற குற்ற உணர்வுடன் சார்லி எழுந்து நிற்கிறார்.

“உனக்கு என்ன ஒரு இது இருந்தா கண்ணதாசன் பேரை சொல்லுவே...”

“தப்புதான் மன்னிச்சிடுங்க” (இவருக்கு கண்ணதாசனை பிடிக்காதுன்னு தெரியாம போச்சே என்று மைண்ட் வாய்ஸ் சொல்கிறது)

ஆத்ரேயா “அது யார் தெரியுமா?, சாட்சாத் சரஸ்வதி.. அவர் பேரை எப்படி அவ்வளவு சாதாரணமா நீ சொல்லலாம்?. இனிமே அந்தப்பெயரை நீ சொல்லும்போது ரொம்ப ஜாக்கிரதையா, மரியாதையோட சொல்லணும் தெரிஞ்சுதா?” என்றாராம்.

இதை சார்லி என்னிடம் சொல்லி, “என்னங்க ஒரு தெலுங்கு பாடலாசிரியருக்கு கண்ணதாசன் மேல இவ்வளவு மரியாதையா?, நாம கூட அப்படி இல்லையேன்னு நினைச்சு வருத்தம் ஆயிடுச்சு” என்றார்.

ஆத்ரேயா இப்படி என்றால், மலையாளப் பாடலாசிரியர் வயலார் வேறு விதம். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘செம்மீன்.’ இந்தப் படத்தை தயாரித்த ராமு கரியாட் என்ற தயாரிப்பாளரின் அலுவலகம் சென்னையில் இருந்தது. அவர் அலுவலகத்திற்கு வயலார் வந்தால், உடனே ராமு கரியாட் அப்பாவுக்கு போன் செய்து வரவழைத்துவிடுவார்.

அப்பா உடனே போய் வயலாரை சந்திப்பார். வயலார் கேரளாவில் இருக்கும்போது வாரம் இரண்டு முறையாவது, இரவில் தொலைபேசியில் அழைப்பார். நாங்கள் யாராவது போனை எடுத்தால் ‘ஞான் வயலார்’ என்று மட்டும்தான் சொல்வார். எதுவும் கேட்காமல் அப்பாவிடம் போனைத் தந்துவிடுவோம்.

அப்பாவுக்கு மலையாளம் தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது. ஆனாலும் மணிக்கணக்காக பேசுவார்கள்.

“ரெண்டு மணி நேரம் பேசுனீங்களே.. என்ன புரிஞ்சுது?” என்று அம்மா கேட்பார்கள்.

“அது உனக்கு புரியாது” என்பார் அப்பா.

தன் குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை கண்ணதாசன் வீட்டில் திருமணம் செய்து தரவேண்டும் என்பது வயலாரின் ஆசை. அதை அப்பாவிடமே சொல்லி இருக்கிறார். ஆனால் கடைசி வரையில் அது நிறைவேறவே இல்லை.



எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு பாடல் கம்போசிங். நானும் போய் இருந்தேன். டியூன் போடுவதற்கு முன்னால் வழக்கமான கலாட்டாக்கள் முடிந்த பிறகு விஸ்வநாதன் அப்பாவிடம், “அண்ணே நேத்து வயலார் ஒரு பாட்டு எழுதினார்” என்று சொல்லி அந்த வரிகளை சொன்னார்.

விஸ்வநாதன் சொன்ன விதத்தில் அந்த வரிகள் என் நெஞ்சில் அப்படியே பதிந்து போய் விட்டது.

“ஆகாயத்தினை பிராந்து பிடிச்சு

பூமாதேவி அதை கண்டு சிரிச்சு”

(ஆகாயத்திற்கு பைத்தியம் பிடித்ததாம், பூமாதேவி அதைப் பார்த்து சிரித்தாளாம்)

அன்று இரவு கூடுதலாக இரண்டுமணி நேரம் அப்பாவும் வயலாரும் பேசினார்கள்.

அப்பாவை தன் சொந்த மகன் போல் நடத்தியவர் மெரிலாண்ட் சுப்பிரமணியம். மலையாள படத் தயாரிப்பாளரான இவரது மெரிலாண்ட் ஸ்டூடியோ, இன்றும் திருவனந்தபுரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. மெரிலாண்ட் சுப்பிரமணியத்தை ‘அப்பா’ என்றுதான் அப்பா அழைப்பார். கவிஞர் பெத்தடின் ஊசி போட்டுக்கொள்வது தெரிந்ததும் அவர் துடித்துப் போய்விட்டார். “குருவாயூரப்பா இவனை நீ தான் காப்பாத்தணும்” என்று கண்ணீர் விட்டார்.

நடிகை அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ் ஒரு பிரபலமான இசையமைப்பாளர். அப்பாவை பார்க்க வந்தால் திரும்பிப் போகும்போது, பின்னாலேயே நடந்து சென்று வெளியே வந்தவுடன்தான் திரும்பி நடப்பாராம். காரணம் கேட்டால், “சரஸ்வதி கடாட்சம் பெற்றவருக்கு முதுகைக் காட்டக்கூடாது” என்பாராம். அப்பாவும் அவரைப் பின்பற்றி பாரதிதாசனைப் பார்த்தால் அப்படியே செய்வாராம்.

ஆதிநாராயணராவ் அப்பாவின் மீது வைத்திருந்த அன்பைப்பற்றி, அப்பா தான் எழுதிய புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார்:

“என்னைக் கண்டதும் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொள்ளக் கூடியவர் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ். தஞ்சை ராமையாதாஸ் எழுதிய கம்பெனியாதலால், எவ்வளவு அர்த்தமில்லாமல் எழுதினாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால் எனக்கு அப்படி பழக்கமில்லையே. அவர் அபார ஞானஸ்தர். கர்நாடகத்தில் மெல்லிசையை அவரிடம் கேட்க வேண்டும்.”

தெலுங்கு, மலையாளம், கன்னடத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தமிழில் படம் தயாரித்தால், அதில் கண்ணதாசன் தான் பாடல்கள் எழுத வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். ஒரு படைப்பாளியை தெய்வம்சம் பொருந்தியவராக பார்த்தவர்கள் அவர்கள்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிற்கு தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயணராவ் குடிவந்தார். அப்போது அவர் ஒரு சில ‘டப்பிங்’ படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். தினமும் எங்கள் வீட்டு வாசலில் வரிசையாக நிற்கும் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களை தன் வீட்டு மாடியில் இருந்து பார்க்கும் தாசரி நாராயணராவ், தன் மனைவி பத்மாவை கூப்பிட்டுக் காட்டி “நானும் இந்த மாதிரி பெரிய ஆளா வரணும்” என்பாராம்.

பத்மா என் தாயாருக்கு மிகவும் நெருக்கமான தோழி ஆனார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இதைச்சொல்வார். தாசரி நாராயணராவ் பிற்காலத்தில் இயக்குனராகி, நடிகராகி, மத்திய அமைச்சராகவும் ஆனார். 200 படங்களை இயக்கி சாதனை படைத்தார்.

அவர் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது அப்பாவை பார்த்துவிட்டார் என்றால், காரை விட்டு இறங்கி அப்படியே வந்து வணக்கம் சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாம போய் விடுவார். அகில இந்திய அளவில் அவர் புகழ் பெற்ற பிறகும் கூட, அப்பாவின் மீது அவர் வைத்திருந்த மரியாதை சிறிதும் குறையவில்லை.

ஒரு முறை விஜயா கார்டனில் ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருந்த அவர், அங்கு வந்த என்னைப் பார்த்தார். உடனே என்னை அருகில் அழைத்து அங்கிருந்த அனைவரிடமும் “இதி மன கண்ணதாசன்காரு பாபு” (இவர் நம்ம கண்ணதாசனின் பிள்ளை) என்று அறிமுகப்படுத்தினார்.

மொழிகளைத் தாண்டி, ஜாதி, மதங்களைத் தாண்டி, ஒரே குடும்பமாக, சினிமா என்ற ஒரு மந்திரக் கயிற்றால் அனைவரும் பிணைக்கப்பட்டிருந்த அந்தக்காலம் நிச்சயம் சினிமாவின் பொற்காலம்தான்.

-தொடரும்.

Next Story