அம்மாவும்.. அன்பு மகளும்..


அம்மாவும்.. அன்பு மகளும்..
x
தினத்தந்தி 15 Dec 2019 5:25 AM GMT (Updated: 15 Dec 2019 5:25 AM GMT)

பிரபலமான ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் புடவை உடுத்தி அட்டகாசமாக தோன்றியிருக்கிறார், மாளவிகா.

திரை உலக ஜோடிகளான ஜெயராம்- பார்வதியின் மகள் மாளவிகா. வெள்ளித்திரை தம்பதிகளின் மகள் என்றாலே ‘எப்போது அவர் சினிமாவில் நடிக்க வருவார்?’ என்ற கேள்வி தலைதூக்கிவிடும் சூழலில் பிரபலமான ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் புடவை உடுத்தி அட்டகாசமாக தோன்றியிருக்கிறார், மாளவிகா. அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அந்த கேள்விக்கு ஆழமாக உயிரூட்டியிருக்கிறது.

அதே கேள்வியை மாளவிகாவிடம் கேட்டால், “சினிமாவில் நடிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் முடியாது என்று கூறமாட்டேன். அதை எனக்கு கிடைக்கும் கடவுள் அனுக்கிரகமாக கருதுவேன்” என்கிறார். மாளவிகாவின் குடும்பத்தில் அப்பா, அம்மா மட்டுமல்ல சகோதரன் காளிதாசும் சினிமாவுக்கு வந்துவிட்டார். இவரும் வந்துவிட்டால் ‘ஒட்டுமொத்த சினிமா குடும்பம்’ என்ற அந்தஸ்தை பெற்றுவிடும்.

அது பற்றி பார்வதியிடம் கேட்டால், “இப்போது பிள்ளைகள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும். எனது காலத்தில் அப்படி இல்லை. எனது பெற்றோர்கள் சொன்னதால் நான் நடித்தேன்” என்கிறார்.

தொடர்ந்து மாளவிகா, பார்வதியின் உரையாடல்:

மாளவிகா: சிறுவயது முதலே காளிதாசுக்குதான் சினிமாவில் ஆர்வம் இருந்துகொண்டிருந்தது. நான் ஆடைவடிவமைப்பு, விளையாட்டு போன்றவைகளில்தான் ஈடுபாடுகாட்டினேன். அம்மாவும் சிறுவயதில் என்னைபோல்தான் இருந்திருக்கிறார். ஆனால் 15 வயதில் சினிமா வாய்ப்பு கிடைத்ததும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

பார்வதி: எனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புக்கு நான் கூடுதல் மரியாதை கொடுத்திருக்கவேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். லட்சக்கணக்கானவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு நான் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவிட்டேன் என்ற வருத்தம் என்னிடம் இருந்துகொண்டிருக்கிறது. இவளுக்கு இரண்டு மூன்று சினிமா வாய்ப்புகள் முன்பே வந்திருந்தன. முதலில் மாடலிங் செய்யலாம் என்று விரும்பினாள். இவளுக்கு பேஷன் மீது அதிக ஆர்வம். அதை நுட்பமாக பின்தொடர்ந்துகொண்டும் இருக் கிறாள். நானும், ஜெயராமும் எப்போதும் குழந்தைகளின் விருப்பத்திற்குதான் முன்னுரிமை கொடுப்போம்.

மாளவிகா: எனக்கு விளையாட்டு ஆர்வம் அதிகம். அதற்கு எங்கள் குடும்பத்தில் பிரபலமான ‘ஸ்போர்ட் மேன்’ ஒருவர் இருப் பதுதான் காரணம். துரோணாச்சாரியா விருது பெற்ற பேட்மிண்டன் வீரர் விமல்குமார் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் எனக்கு முன்னுதாரணம். அப்பாவும் பள்ளி, கல்லூரி காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். பத்தாம் வகுப்பு வரை காளிதாசும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களோடு சேர்ந்து நானும் கிரிக்கெட், கால்பந்து விளையாடுவேன். கல்லூரியில் படித்தபோது பயிற்சி மையத்தில் சேர்ந்து விளையாட்டு பயிற்சியும் பெற்றேன். கல்லூரி கால்பந்து அணியிலும் இடம்பிடித்தேன். அடுத்து இங்கிலாந்து சென்று விளையாட்டுத்துறை நிர்வாகத்தில் எம்.எஸ்சி. படித்தேன்.

பார்வதி: காளிதாஸ் சினிமாவில் வளரத் தொடங்கியிருக்கிறான். அவனது சுபாவத்திற்கு ஏற்ற சினிமாக்களை தேர்ந்தெடுக்கிறான். எங்கள் பிள்ளைகள் இருவருமே இரண்டு விதமானவர்கள். இவள் எனக்கு தோழி போன்றவள். நான் வெளியே சென்றாலோ, ஷாப்பிங் சென்றாலோ எனக்கு மாளவிகாவின் சப்போர்ட் தேவை. ஆனால் சீரியசான விஷயங்கள் ஏதாவது இருந்தால் அதை காளிதாசிடம் பகிர்ந்துகொள்வேன்.

23 வயதில் எனது குடும்ப வாழ்க்கை தொடங்கியது என்று சொல்லலாம். அப்போது காளிதாஸ் என் கையில் ஒரு விளையாட்டு பொம்மை போன்றிருந்தான். அவனோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன். குழந்தைகளோடு சேர்ந்து நானும் படித்தேன். இப்போதும் நான் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது, நானும் குழந்தையாகவே இருப்பதாக தோன்றும்.

என்னை பலர் மீண்டும் சினிமாவில் நடிக்க வரும்படி அழைக்கிறார்கள். ஆனால் மாளவிகாவை போன்று எனக்கும் அதில் சிறிது தயக்கம் இருக்கிறது. அதிக நாட்கள் குடும்பத்தலைவியாகவே இருந்துவிட்டேன். அதனால் அந்த தயக்கம் ஏற்பட்டிருக்கிறது. சினிமாவுக்குள் வருவது எளிது. ஆனால் வந்துவிட்டு, ஏன் வந்தோம் என்று நினைத்து வெளியேற நினைத்தால் அது கஷ்டம்.

மாளவிகா: பேஷனை பொறுத்தவரையில் இப்போது மாதத்திற்கு மாதம் ‘டிரென்ட்’ மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் ஜீன்ஸ் அணிந்து அதற்கு பொருத்தமான ‘லாங் டாப’் ஒன்று போட்டுக்கொள்வோம். இல்லாவிட்டால் குட்டையான டாப்பும் அணிந்துகொள்ளலாம். அடுத்த மாதமே அந்த பேஷனும் மாறிவிடும். ஆனாலும் எல்லா காலத்திற்கும் ஏற்ற ஸ்டைலும் இருக்கிறது. அதுதான் புடவை. புடவை கட்டிக்கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். பேஸ்டல் ஷேட்ஸ், டார்க் ஷேட்ஸ் கலர்களை அதிகம் விரும்புவேன். ஜிலுஜிலு கலரையும் சில நேரங்களில் நான் விரும்புவதுண்டு.

Next Story