சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் -டி.ராஜேந்தர்


சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் -டி.ராஜேந்தர்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:30 PM GMT (Updated: 3 Jan 2020 6:01 PM GMT)

சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“1979-ம் ஆண்டு ஒரு தலை ராகம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 40 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த அனுபவம் முழுமையாக சினிமாவிற்கு தேவை என்று பலர் வற்புறுத்தியதால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். மேலும் துணைத்தலைவராக தேர்வான ஸ்ரீனிவாசலு, செயலாளராக தேர்வான டி.மன்னன், இணைச் செயலாளராக தேர்வான கே.காளையப்பன், பொருளாளராக தேர்வான பாபுராவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி வரியை தவிர மற்ற எந்த வரியையும் மாநில அரசுகள் விதிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பல தரப்பட்ட சினிமா சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து ஒரு சிறப்பான முடிவை எடுத்து அரசிடம் கோரிக்கையை முன் வைப்போம்.

டிக்கெட் கட்டணம் முடிந்தவரை குறைக்கப்பட்டு சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்படும். தமிழ் சினிமா தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.”

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

Next Story