தந்தை, மகனாக நடிக்கிறார் ; 2 வேடங்களில் யோகிபாபு


தந்தை, மகனாக நடிக்கிறார் ;  2 வேடங்களில் யோகிபாபு
x
தினத்தந்தி 9 Jan 2020 4:45 AM IST (Updated: 9 Jan 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று திரைக்கு வருகிறது.

 கடந்த வருடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 16 படங்கள் கைவசம் உள்ளன.

கூர்கா படம் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளார். வடிவேலு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடையும் சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து இருப்பதும் சாதகமாக அமைந்துள்ளதால் யோகிபாபு நகைச்சுவை ஏரியாவில் கொடி கட்டி பறக்கிறார்.

ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வரும் ‘டக்கர்’ படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் யோகிபாபு நடிக்கிறார். இதில் தந்தை, மகனாக வருகிறார். யோகிபாபுவின் இருவேட தோற்றங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா, யோகிபாபுவுக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. அதுபோல் இரு வேடங்களில் வரும் டக்கர் படமும் தனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று யோகிபாபு எதிர்பார்க்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

Next Story