நான் சராசரி நடிகை.. இனி நடிக்கும் ஆசை இ்ல்லை.. - ரேணுகா மேனன்


நான் சராசரி நடிகை.. இனி நடிக்கும் ஆசை இ்ல்லை.. - ரேணுகா மேனன்
x
தினத்தந்தி 26 Jan 2020 6:31 AM GMT (Updated: 26 Jan 2020 6:31 AM GMT)

கலாபக்காதலன், தாஸ் போன்ற சினிமாக்களில் கதாநாயகியாக நடித்தவர் ரேணுகா மேனன். மலையாளத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்தார்.

லாபக்காதலன், தாஸ் போன்ற சினிமாக்களில் கதாநாயகியாக நடித்தவர் ரேணுகா மேனன். மலையாளத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்தார். திரை உலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது, திடீரென்று திருமணம் செய்துகொண்டு, கணவர் சூரஜ்குமார் நாயருடன் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பெண் குழந்தை களின் தாயான இவர் 13 வருடங்களாக அங்கு வசித்து வருகிறார். அவரிடம் சினிமாவில் அறிமுகமான காலகட்டம் பற்றி கேட்டால் புன்னகைபூக்க பகிர்ந்துகொள்கிறார்.

“நான் பிளஸ்-டூ படிக்கும்போது, எங்கள் குடும்ப நண்பர் தயாரித்த மாயாமோகித சந்திரன் என்ற மலையாள படத்தில் நடித்தேன். எதனாலோ அந்த படம் வெளியாகவில்லை. அதன் பிறகு டைரக்டர் கமலின் ‘நம்மள்’ என்ற படத்தின் கதாநாயகியானேன். அந்த படத்தில் நான் ஒப்பந்தமானது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

அதன் கதாநாயகிக்காக பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி கொண்டிருந்தார்கள். அப்போது எங்கள் ஊரான திருச்சூரிலும் ஒரு குழுவந்து தேடுதலில் ஈடுபட்டது. அதில் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் டியூஷன் முடிந்து வீடு திரும்பினேன். அப்பா என்னை வீட்டின் உள்அறைக்கு அனுப்பிவைத்துவிட்டு, பேசிக்கொண்டிருந்ததும் நான், ‘என்னை யாரோ பெண் கேட்டு வந்திருப்பார்கள்’ என்று நினைத்துகொண்டேன். ஆனால் அவர் சினிமாவை பற்றி என் பெற்றோரிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு தயாரிப்பாளர் டேவிட், டைரக்டர் கமல் போன்றவர்கள் அழைத்தார்கள். அவர்களையும் சந்தித்துவிட்டு வந்தோம். நாங்கள் ஐதீகமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். சினிமாவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் பயந்தேன். ஷூட்டிங்கின்போது சுஹாசினி என்னை நன்றாக கவனித்துக்கொள்வார். அவர் எனக்கு கம்மல், சங்கிலி போன்றவைகளை வாங்கிக் கொண்டு வருவார்.

அந்த ஒரு சினிமாவோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நம்மளில் நடித்து முடித்ததும் தெலுங்கில் இருந்து அழைப்பு வந்தது. அது ராமோஜிராவ் நிறுவனத்தின் அழைப்பாக இருந்ததால் அதனை தவிர்க்கவேண்டாம் என்று கமல் கேட்டுக்கொண்டார். அதனால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதே வேகத்தில் நான்கு வருடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். ஆனாலும் எப்போதுமே நான் சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

20 வயதில் வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி கற்கவேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்குள் பெற்றோர் எனக்கு வரன் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். வரனை பார்த்து, பேசி முடிப்பதற்குள் ஒன்றிரண்டு வருடங்கள் ஆகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் முதலில் பார்த்த சூரஜ், உடனே திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார். அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.

திருமணம் முடிந்தது. எச்-4 விசாவில் அமெரிக்கா சென்றேன். அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிய டோமினிக் என்பவரது அறிமுகம் கிடைத்தது. சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் என்னிடம் நடிப்பு, நடனம் பற்றி நிறைய விவாதித்தார். பின்பு என்னிடம் ‘அந்த பகுதி யில் உள்ள சிறுமிகளுக்கு உங்களால் நடனம் கற்றுத்தரமுடியுமா?’ என்று கேட்டார்.

கடவுளாக தருகின்ற வாய்ப்பு. அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மனது சொன்னது. நானும் சம்மதித்தேன். தேவாலயத்திலே நான் நாட்டிய பயிற்சி வழங்குவதற்கு அவர் இடம் ஒதுக்கித் தந்தார். நானும் நாட்டிய ஆசிரியை ஆகிவிட்டேன். குழந்தைகள் நிறைய வரத்தொடங்கியதும் அதன் அருகிலே இன்னொரு இடத்தில் பயிற்சி மையத்தை உருவாக்கினேன். அங்கு சினிமா நடனம், பாரம்பரிய நடனம் இரண்டையும் கற்றுக்கொடுத்தேன்.

நான் பணத்திற்காக நடன பயிற்சிகொடுக்கவில்லை. எத்தனை குழந்தைகளை என்னால் கவனிக்க முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே சேர்த்துக்கொள்கிறேன். வீட்டு வேலைகளையும், குடும்ப நிர்வாகத்தையும் நானே கவனித்துக்கொள்கிறேன். எனது கணவரும் பிசியாக இருக்கிறார். அவருக்கு திருவனந்தபுரத்திலும் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதையும் அமெரிக்காவில் இருந்தே இயக்கிக்கொண்டிருக்கிறார்.

நாங்கள் வசித்த பகுதியில் நடந்த எல்லா போட்டிகளுக்கும் என்னிடம் பயின்ற மாணவிகளை அனுப்புவேன். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பரிசுகளை பெற்றுவிடுவார்கள். நடனமாடும் சிறுமிகளுக்கு மேக்-அப் மிக முக்கியம். நானே அவர்களை அலங்காரம் செய்தேன். அப்போது நவீன மேக்-அப் பற்றி கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்தது. அதையும் கற்று சான்றிதழ் பெற்றுள்ளேன்..” என்ற ரேணுகா மேனனிடம், முக்கியமான அந்த கேள்வியை கேட்டதும், தெள்ளத்தெளிவாக பதில் தருகிறார். அந்த கேள்வி, ‘மீண்டும் நடிக்க வருவீர்களா?’ என்பது!

“என்னிடம் நிறைய பேர் இந்த கேள்வியை கேட்டு விட்டார்கள். அதற்கு, நடிக்க வரமாட்டேன் என்பதுதான் என் பதில். தமிழில் இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. டெலிவிஷனில் நிகழ்ச்சிகள் நடத்தவும், தொகுத்து வழங்கவும் வாய்ப்புகள் தேடிவந்தன. அவைகளில் எதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அறிமுகமானவர்களிடம் தொடர்ந்து நட்புபாராட்டும் விஷயத்தில் நான் ரொம்பவும் பின்தங்கியிருப்பவள். என் செல்போன் எண் மாறிவிட்டதால் என்னையும் யாரும் அழைப்பதில்லை. எனக்கு திரை உலகுக்கு அப்பாற்பட்ட நண்பர்களே அதிகம். சினிமாவில் இருந்து இப்போது என்னிடம் நடிகை மாயா விஸ்வநாத்தும், தமிழ்பட ஆர்ட் டைரக்டர் மிலன் பெர்ணான்டஸ் இருவருமே தொடர்பில் இருக்கிறார்கள்.

நான் மீண்டும் நடிக்க விரும்பாததற்கு என்ன காரணம்? என்று நீங்கள் கேட்கலாம். முதல் காரணம், என்னை நான் ஒரு சிறந்த நடிகையாக ஒருபோதும் கருதியதில்லை. நான் ஒரு சராசரி நடிகை. இரண்டாவதாக எனக்கு சினிமாவில் மிகுந்த ஈடுபாடோ, எதிர்பார்ப்போ எதுவும் இல்லை. நான் எதையும் இழந்ததாக நினைக்கவில்லை. இ்ந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் ருசியான உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தவள். அதுபோல் என் குழந்தைகளுக்கும் ருசியான உணவு தயாரித்து கொடுக்க விரும்புகிறேன். நான் நன்றாக சாப்பிடுவேன். அதனால் எனக்கு சமைக்கவும் பிடிக்கும். எனக்கு பிடித்தது சிக்கன் பிரியாணி. அதை பலவிதங்களில் தயார்செய்ய என்னால் முடியும். மகள்கள் இருவருக்கும் நடனம் தெரியும். மூத்த மகள் சுவாதி விடிய விடிய சினிமா பார்க்கவும் தயாராக இருக்கிறாள். சினிமா அவளுக்கு அந்த அளவுக்கு பிடிக்கும்..” என்கிறார், ரேணுகா மேனன்.

Next Story