மீண்டும் நடிகர் சங்க தேர்தல் ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரி பொறுப்பு ஏற்றார்


மீண்டும் நடிகர் சங்க தேர்தல் ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரி பொறுப்பு ஏற்றார்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 9:39 PM GMT)

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மீண்டும் தேர்தல் ஏற்பாடுகள் நடக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நாசர், விஷால் தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தலை எதிர்த்து 66 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த தேர்தலில் ஓட்டு போட்ட தங்களுக்கு ஓட்டு உரிமை மறுக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து தேர்தலை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அத்துடன் 3 மாதங்களில் நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்துக்கு சென்று பொறுப்பு ஏற்று தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்கு தொடர்ந்த 66 பேருக்கு ஓட்டு உரிமை உள்ளதா? என்று தனி அதிகாரி மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகளிடம் ஆய்வு செய்து வருகிறார். பாக்யராஜ், நாசர் அணியினரிடமும் கருத்து கேட்க உள்ளார். அதன்பிறகு தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுகிறார்.

தேர்தல் நடத்த ரூ.30 லட்சம் செலவாகும் என்றும், அதற்கான நிதி சங்கத்தில் இருப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக நாசர் அணியினர் அறிவித்தனர். ஆனால் பாக்யராஜ் அணிதரப்பில் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்ததால் உடனடியாக அப்பீல் செய்ய முடியவில்லை. தற்போது கேவியட் மனுவை நீக்கி இருப்பதாகவும், இன்று அல்லது திங்கட்கிழமை அப்பீல் மனுதாக்கல் செய்யப்படும் என்றும் நாசர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story