சினிமா செய்திகள்

தனுசுக்கு நெற்றிக்கண் ரீமேக் உரிமையா? விசு புகாருக்கு பட நிறுவனம் பதில் + "||" + Movie company's response to the Visu complaint

தனுசுக்கு நெற்றிக்கண் ரீமேக் உரிமையா? விசு புகாருக்கு பட நிறுவனம் பதில்

தனுசுக்கு நெற்றிக்கண் ரீமேக் உரிமையா?  விசு புகாருக்கு பட நிறுவனம் பதில்
நெற்றிக்கண் ரீமேக் உரிமை சம்மந்தமாக விசு புகாருக்கு அந்த படத்தின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார். நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார்.

இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை.

இந்நிலையில் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை என கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். விசு கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த விதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது.

இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும், விதி மீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.