மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்- கமல்ஹாசன் டுவிட்


மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்- கமல்ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 20 Feb 2020 3:37 AM GMT (Updated: 20 Feb 2020 5:20 AM GMT)

கமல்ஹாசன் படப்பிடிப்பில் நேற்று ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசேஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பின்னர் தனியார் மருத்துவமனை சென்ற கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். 

கமல்ஹாசன் டுவிட்

இந்த நிலையில்,  கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட  அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில்  பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.  முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.  இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story