தேசிய விருது பெற்ற இந்தி நடிகர் படத்துக்கு துபாயில் தடை


தேசிய விருது பெற்ற   இந்தி நடிகர் படத்துக்கு துபாயில் தடை
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 5:28 PM GMT)

இந்தி நடிகர் அயுஷ்மன் குரானா படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடைவிதித்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் அயுஷ்மன் குரானா. இவர் விக்கி டோனர், துமாரி சுலு, அந்தாதுன், பதாய் ஹோ, ஆர்டிகிள் 15 உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அந்தாதுன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். அயுஷ்மன் குரானா தற்போது ‘சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான்’ இந்தி படத்தில் நடித்துள்ளார்.

ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அயுஷ்மன் குரானாவும், ஜிதேந்திர குமாரும் முத்தமிடும் சர்ச்சை காட்சி இடம்பெற்று இருந்தது. இதையடுத்து படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி படம் நேற்று திரைக்கு வந்தது.

வெளிநாடுகளிலும் சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான் படத்தை திரையிட்டனர். ஆனால் இந்த படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடைவிதித்துள்ளது.

ஓரின சேர்க்கையாளர்கள் கதை என்பதால் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்கள், அயுஷ்மன் குரானா, ஜிதேந்திர குமாரின் முத்த காட்சிகளை நீக்கி விடுகிறோம். படத்தை திரையிட அனுமதியுங்கள் என்று அங்குள்ள தணிக்கை குழுவிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனாலும் ஓரின சேர்க்கையாளர்கள் படத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று மறுத்து விட்டனர்.

Next Story