குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 23 Feb 2020 8:45 AM GMT (Updated: 2020-02-23T14:15:20+05:30)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இரண்டு பேரில் கைவசம் அதிக படங்களை வைத்திருப்பவர் யார்? (மு.கார்த்திக், ராசிபுரம்)

சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவே நடித்து வருவதால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கைவசம் மிக குறைவான படங்களையே வைத்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடிப்பதால், அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன!

***

விக்ரம் பிரபு நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது? (கே.சின்னதுரை, அருப்புக்கோட்டை)

அவர் நடித்த படங்கள் எல்லாமே முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்துள்ளன. அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம், ‘கும்கி!’

***

குருவியாரே, மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படம் வருகிற தீபாவளி விருந்தாக திரைக்கு வருமா? (எச்.சுல்தான் செரீப், மேட்டூர்)

‘பொன்னியின் செல்வன்’ 2 பாகங்களாக தயாராகிறது. முதல் பாகம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர வாய்ப்பே இல்லை. அடுத்த வருடம் கோடை விருந்தாக திரைக்கு வரும்!

***

ராதிகா சரத்குமார் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? எத்தனை மொழிகளில் அவர் நடித்துள்ளார்? (ஆர்.தமிழ்செல்வன், கரூர்)

ராதிகா சரத்குமார் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில், 385 படங்களில் நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, விஜய் சேதுபதி அரசியலுக்கு வருவாரா? (எம்.கோபால், திண்டுக்கல்)

‘மார்க்கெட்’ இன்னும் சூடு பிடித்து ரசிகர்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு கூடினால், விஜய் சேதுபதியும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதாம்!

***

4 படங்களில் நடித்து முடித்ததும் சில நடிகர்களுக்கு சொந்த பட ஆசை வந்து விடுகிறதே...ஏன்? (எஸ்.அர்‌ஷத் பயாஸ், குடியாத்தம்)

அந்த நடிகரின் கைவசம் அதிக படங்கள் இருப்பது போல் ஒரு ‘இமேஜை’ உருவாக்கிக்கொள்வதற்காகவே சொந்த பட தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள்.

***

குருவியாரே, ரஜினிகாந்த், மீனா ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

சிவா இயக்கி வரும் புதிய படத்தில், ரஜினிகாந்த்–மீனா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்!

***

கமல்ஹாசனுடன் அம்பிகா, ராதா ஆகிய இருவரும் சேர்ந்து நடித்து இருக்கிறார்களா? (பி.அர்ஜுன், கோபி)

‘காதல் பரிசு’ படம் பார்க்கவில்லையா?

***

குருவியாரே, இளையராஜா இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருக்கிறாரா? (எம்.சுரேஷ், பொள்ளாச்சி)

‘‘அம்மா என்றழைத்தாலே...,’’ ‘‘பொறுத்தது போதும்’’ உள்பட ஏராளமான பாடல்களை இளையராஜா இசையில், ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்!

***

சீனுராமசாமி டைரக்‌ஷனில் தயாரான ‘இடம் பொருள் ஏவல்’ படம் என்ன ஆனது? (ஜே.கென்னடி, அரியலூர்)

படம் முடிவடைந்து திரைக்கு வர தயாரான நிலையில், சில காரணங்களால் திரைக்கு வரமுடியாதபடி, பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது!

***

குருவியாரே, விஜய் நடித்து வரும் 64–வது படத்தின் கதாநாயகி யார்? அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? (கே.மணிகன்டன், விருதுநகர்)

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர்!

***

விக்னேஷ் சிவனை நயன்தாரா எப்போது திருமணம் செய்து கொள்வார்? (மா.பெரியசாமி, டி.கல்லுப்பட்டி)

விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக உருவாக்கும் முயற்சியில் நயன்தாரா வெற்றி பெற்று விட்டார். காதலரை பிரபல டைரக்டராக உருவாக்கும் முயற்சியில், அவருக்கு பாதி வெற்றிதான் கிடைத்துள்ளது. மீதி வெற்றியும் அடைந்து விட்டால், உடனே திருமணம்தான்!

***

குருவியாரே, அஜித்குமாரும், ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைவது எப்போது? (இரா.சம்பத், கம்பம்)

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் நடிக்க வேண்டும் என்று அஜித்குமார் விரும்பும்போது...!

***

தமிழ்நாட்டில், ‘பாகுபலி’ படத்தின் வசூல் சாதனையை ‘பிகில்’ படம் முறியடித்தது உண்மையா? (கே.ஆர்.விஜயலட்சுமி, சிவகாசி)

‘‘உண்மைதான்’’ என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, அருண் விஜய் நடித்து வரும் ‘அக்னி சிறகுகள்,’ பேய் படமா? (சி.மனோகரன், வாணியம்பாடி)

‘அக்னி சிறகுகள்,’ பேய் படம் அல்ல. அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷராஹாசன் ஆகிய மூன்று பேர்களின் கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

***

திருமணத்துக்குப்பின் நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறாராமே...அவர் நடிக்கும் படம் எது? (வி.ஆனந்த், மதுரவாயல்)

‘டிரான்ஸ்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் நஸ்ரியா மறுபிரவேசம் செய்கிறார்!

***

குருவியாரே, லிசி பிரியதர்‌ஷனின் மகள் கல்யாணி பிரியதர்‌ஷன் இதுவரை எத்தனை தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்? இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் எது? (கே.சி.ரங்கராஜன், ஸ்ரீரங்கம்)

கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்த ‘ஹீரோ’ படம் ஏற்கனவே திரைக்கு வந்து விட்டது. அடுத்து அவர் சிம்பு ஜோடியாக, ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்!

***

செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர் திரிஷா என்று எல்லோருக்கும் தெரியும். அவரையடுத்து செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டு அக்கறையுடன் அவர்களை வளர்த்து வருபவர் யார்? (ஏ.ராஜா, சேலம்)

திரிஷாவை அடுத்து செல்லப்பிராணிகளை மிகுந்த அன்புடன் வளர்த்து வருபவர், விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன்!

***

குருவியாரே, பின்னணி பாடகிகளில் மிகுந்த அழகும், இனிய குரல் வளமும் கொண்டவர் யார்? (எஸ்.ராம், உடுமலைப்பேட்டை)

ஷ்ரேயா கோ‌ஷல்!

***

வடிவேல் நடித்த கதாபாத்திரங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த கதாபாத்திரம் எது? அது எந்த படத்தில் இடம்பெற்றது? (வி.ஜான்சன், நாகர்கோவில்)

வடிவேல் நடித்த ‘வண்டு முருகன்,’ ‘நாய் சேகர்,’ ‘ஸ்னேக் பாபு’ ஆகிய கதாபாத்திரங்கள் எல்லோரையும் சிரிக்க வைத்தவை என்றாலும், அவருடைய ‘கைப்புள்ள’ கதாபாத்திரம் காலத்தால் மறக்க முடியாது. அடுத்த தலைமுறையையும் தாண்டி நிற்கும்!

Next Story