விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டேனா? புகாருக்கு மிஷ்கின் விளக்கம்


விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டேனா?   புகாருக்கு மிஷ்கின் விளக்கம்
x
தினத்தந்தி 24 Feb 2020 10:00 PM GMT (Updated: 24 Feb 2020 7:42 PM GMT)

நடிகர் விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக வெளியான புகாருக்கு டைரக்டர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து திரைக்கு வந்த துப்பறிவாளன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தையும் விஷால் தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கினார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.

முதல் கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்தனர். அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் துப்பறிவாளன்-2 படத்துக்கு திட்டமிட்டதை விட மேலும் ரூ.40 கோடி கூடுதல் செலவாகும் என்று மிஷ்கின் கூறியதாகவும், சம்பளத்தையும் உயர்த்தி கேட்டதாகவும் விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். மீதி படத்தை விஷாலே இயக்க உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மிஷ்கின் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. உண்மையில் அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன்.

இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதற்கு ரூ.100 கோடி செலவாகி உள்ளது. மீதி காட்சிகளை படமாக்க ரூ.400 கோடி தேவை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சியை எடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு மட்டுமே ரூ.100 கோடி செலவாகும். எனவேதான் மொத்தமாக அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன்” என்று பதில் அளித்துள்ளார்.

Next Story