இத்தாலியில் கொரோனா பரவியதால் மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு ரத்து


இத்தாலியில் கொரோனா பரவியதால்   மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு ரத்து
x
தினத்தந்தி 27 Feb 2020 8:26 PM GMT (Updated: 27 Feb 2020 8:26 PM GMT)

வெனிஸ் நகரில் நடந்த மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பை ரத்து செய்வதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது.

டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இணையாக வசூல் சாதனைகளும் நிகழ்த்துகின்றன. இதுவரை 6 மிஷன் இம்பாசிபிள் படங்கள் வந்துள்ளன. இந்த படத்தின் 7-ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கிரிஸ்டோபர் மெக்குயரி இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இத்தாலி வெனிஸ் நகரில் நடந்து வந்தது. இந்த நிலையில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு இத்தாலியில் 5 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மிஷன் இம்பாசிபிள் படக்குழுவினரிடம் பீதி கிளம்பியது.

இதையடுத்து வெனிஸ் நகரில் நடந்த மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பை ரத்து செய்வதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது. படக்குழுவினர் உடனடியாக அமெரிக்கா திரும்பினார்கள். இதுபோல் கடந்த திங்கட்கிழமை சீனாவில் வெளியாக இருந்த சோனிக் தி ஹெட்ஜ்ஹாக் என்ற ஹாலிவுட் படத்தின் வெளியீட்டையும் கொரோனா காரணமாக தள்ளி வைத்து விட்டனர்.

சீன தலைநகர் பீஜிங்கில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ‘நோ டைம் டூ டை’ ஜேம்ஸ் பாண்ட் படத்தின் சிறப்பு காட்சியும், நடிகர்களின் சீன பயணமும் கொரோனா காரணமாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story