மார்ச் 23-ந்தேதி டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் சாகச பயண நிகழ்ச்சி ஒளிபரப்பு


மார்ச் 23-ந்தேதி டிஸ்கவரி சேனலில்   ரஜினிகாந்த் சாகச பயண நிகழ்ச்சி ஒளிபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 11:15 PM GMT (Updated: 27 Feb 2020 9:38 PM GMT)

டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்தின் சாகச பயண நிகழ்ச்சி மார்ச் 23-ந்தேதி ஒளிபரப்பாகிறது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இதை தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று ஆபத்தான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது. அதில் இருந்து எப்படி தப்புவது என்பதை விளக்கும் ஆவணப்படத்தை பார்க்க பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் பிரபலமானவர்களும் பங்கேற்கிறார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் இதில் கலந்து கொண்டு காட்டில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ‘இன்டு த வைல்டு வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதிக்கு பியர் கிரில்சும், ரஜினிகாந்தும் சென்று இருந்தனர்.

படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினி கூறும்போது, “வனப்பகுதியில் டிஸ்கவரி சேனலுக்காக நடந்த படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது” என்றார். பின்னர் பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தையும், நிகழ்ச்சி தொடர்பான டீசரையும் வெளியிட்டு இருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினிகாந்தின் இந்த சாகச பயண நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று  டிஸ்கவரி சேனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதற்கான முன்னோட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Next Story