சினிமா செய்திகள்

மர்லின் மன்றோ + "||" + Hollywood heroes : Marilyn Monroe

மர்லின் மன்றோ

மர்லின் மன்றோ
இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்திய சிறுமி, பிற்காலத்தில உலகப்புகழ் பெற்ற ‘கவர்ச்சி கன்னி’யாக திகழ்ந்தார். இவரது படங்கள் அனைத்தும் 200 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்து திரை உலகை அசரடித்தன.
1962-ம் ஆண்டு தனது 36-வது வயதில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மரணம் அடைந்தார். இவரது சாவில் இன்னும் மர்மம் நீடிக்கத்தான் செய்கிறது. சரி.. இவரது வாழ்க்கை சரிதத்தை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்.

1926-ம் வருடம் ஜூன் 1-ந் தேதி கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். அப்போது இவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘நார்மா ஜுன் மார்டென் கென்’ என்பதாகும். அதுவே பின்னால் ‘நார்மா ஜுன் பேக்கர்’ என்றானது. இவரது தந்தை, யார் என்றே இவருக்குத் தெரியாது. ஆனால் கிளார்க்கேபிள் என்னும் பிரபல நடிகர்தான், தனது தந்தை என்று நினைத்துக் கொண்டார்.

இவரது தாய் கிளாடிஸ் ஒரு மனநோயாளி. இதனால் அவர் மனநோய் மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதில் தாய், தன்னை தலையணை வைத்து தூங்க வைப்பார் என்பது மட்டுமே மன்றோ வுக்கு ஞாபகம் இருக்கிறது. சிறு வயதில் அனாதை விடுதிகளிலும், தாய்-தந்தையருக்கு தெரிந்த காட் டர்ட்- கிரேஸ் என்ற டாக்டர் தம்பதியிடமும் வளர்ந்தார். இளம் வயதில் மன்றோவை, அவர்கள் சினிமா படங்களைப் பார்க்கக்கூட அனுமதித்தது இல்லை.

ஒரு கட்டத்தில் பணி நிமித்தமாக டாக்டர் தம்பதியருக்கு இடமாற்றம் வந்தது. அதனால் மன்றோவை அவர்களுடன் கூட்டிச் செல்ல முடியவில்லை. அதனால் அவர் மீண்டும் ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு 7 வயது. அந்த விடுதியில் தனக்கு 11 வயதாக இருந்தபோதுதான், தன்னை சிலர் கற்பழித்ததாக, பிற்காலத்தில் மன்றோ சொல்லியிருக்கிறார். அந்த விடுதியில் அவருக்கு ஏற்பட்ட தொடர் தொல்லையின் காரணமாக, 1942-ம் ஆண்டு தன்னுடைய 16-வது வயதில், தன் காதலன் ஜிம்மி டக்கர்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த சந்தோஷம் அவருக்கு நெடுநாள் நீடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே, கணவன் கப்பல் வேலைக்காக போய்விட்டார். அங்கிருந்து தென்பசிபிப் பக்கம் அனுப்பப்பட்டான். இதனால் மீண்டும் தனி மரமாக நின்றார், மன்றோ. தன் வறுமையை போக்குவதற்காக, கலிபோர்னியாவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அங்குதான் அவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவம் நிகழ்ந்தது.

இவரது அழகை ஒரு புகைப்பட நிபுணர், பல கோணங்களில் படம் எடுத்து வெளியிட்ட காரணத்தால், மாடலிங் மூலமாக மன்றோவுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. மாடலிங் மூலமாக சினிமாவுக்கு நுழையும் கனவில் இருந்தார் மன்றோ. அந்த நேரத்தில்தான் அவரது கணவன், 1946-ம் ஆண்டு திரும்பி வந்தார். ஆனால் சினிமா கனவில் இருந்த மன்றோ, தனது திருமண வாழ்க்கைக்கு திரும்ப விரும்பவில்லை. எனவே அவர்கள் அந்த வருடமே விவாகரத்துப் பெற்றனர்.

அந்த வருடத்திலேயே தனது முதல் படத்திற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அவரது பெயர் ‘மர்லின் மன்றோ’ என்று மாறியது. தனது முகத்தை, தலைமுடியை எவ்வளவு அழகுபடுத்த முடியுமோ, அவ்வளவு அழகுபடுத்தினார். ஆனால் 1950-ம் ஆண்டு வரை, அவரது நடிப்புத் தொழில் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

1950-ம் ஆண்டு ஜான் ஹூஸ்டன் என்ற பிரபல இயக்குனரின் இயக்கத்தில் வெளியானது ‘தி அஸ்பால்ட் ஜங்கிள்’ (The Asphalt Jungle). இது ஒரு கிரைம் திரில்லர் வகை திரைப்படம். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களின் பார்வையில் விழுந்தார், மர்லின் மன்றோ. அவரது கவர்ச்சியும், நடிப்பும் ரசிகர்களை ஒருங்கே கவர்ந்தது. அடுத்ததாக வந்த ‘ஆல் அபோட் ஈவ்’ (All About Eve) திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ‘மிஸ் கிளாஸ்வேல்’ என்ற அவரது கதாபாத்திரம் மக்களால் ரசிக்கப்பட்டது. மர்லின் மன்றோ என்னும் கவர்ச்சிக் கன்னி அப்போதே உதயமாகிவிட்டார்.

1953-ம் வருடம் வெளியான படம் ‘நயாகரா.’ இதில் ஒரு இளம் மனைவியாக நடித்தார் மன்றோ. அதில் இவருக்கு ஒரு காதலன். அவனுக்காக தனது கணவனைக் கொல்ல முயலும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார் மன்றோ. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

1953-ல் பெட்டிகிராபின் மற்றும் லாரன்பேகால் என்னும் இரண்டு பெரிய நடிகைகளுடன் இணைந்து மன்றோ நடித்த படம் ‘ஹவ் டூ மேரி எ மில்லினியர்’ (How to Marry a Millionaire). 1954-ல் ‘தேர் இஸ் நோ பிசினஸ், லைக் ஷோ பிசினஸ்’ (There's No Business Like Show Business), 1955-ம் ஆண்டு ‘தி செவன் இயர் இட்ச்’ (The Seven Year Itch) ஆகிய படங்களும் வெளியாகின. இந்தப் படங்களுக்குப் பிறகு மர்லின் மன்றோவைப் பற்றி பேசாதவர்களே கிடையாது எனலாம். அவரது உடல் அமைப்பு, மிகவும் வசீகரமான குரல், நடிப்பு போன்றவை அவரை எல்லோரும் கொண்டாடும்படியாக வைத்தது.

நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடலை வருத்திக் கொண்ட தால், மன்றோவின் உடல்நலத்தில் அவ்வப்போது சிறுசிறு கோளாறுகள் ஏற்பட்டது. மன்றோவின் அலட்டல் பல நடிகர், நடிகைகளுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பூவோடு சேர்ந்த நாறாக இருக்கத்தான் அவர்களால் முடிந்தது.

தொடர்ந்து கவர்ச்சியான வேடத்தில் நடித்து ஓய்ந்துபோன மன்றோ, 1956-ம் ஆண்டு ‘பஸ் ஸ்டாப்’ (Bus Stop) என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் ஒரு பாடகியாக நடித்தார். அவர் மீது ஒரு பண்ணையார் காதல் கொண்டு கடத்திப் போய்விடுவார். இந்தப் படத்தில் மன்றோவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 1957-ல் லாரன்ஸ் ஆலிவர் கதாநாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்த படம் தான் ‘தி பிரின்ஸ் அண்ட் தி ஷோ கேர்ள்’ (The Prince and the Show girl) திரைப்படம். இந்தப் படத்தின்போது படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்தும், சக நடிகர்களுடன் தகராறு செய்தும் பெரும் தொல்லைகளை கொடுத்தார் மன்றோ. ஆனால் லாரன்ஸ் ஆலிவர் பொறுமையாக இருந்து படத்தை வெளியே கொண்டுவந்தார். பல இடங்களிலும் சுமாராக ஓடிய இந்தத் திரைப்படம், இங்கிலாந்தில் மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

1959-ம் ஆண்டு குடும்பம் மற்றும் ஹாஸ்யம் கலந்த படத்தில் நடித்தார் மன்ேறா. அவருக்கு ஹாஸ்யம் மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தின் பெயர் ‘சம் லைக் இட் ஹாட்’ (Some Like It Hot). இந்தப்படமும் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. சிறந்த நகைச்சுவை நடிகை என்ற கோல்டன் குளோப் பரிசு சார்பில் பட்டமும் கிடைத்தது.

சொந்த வாழ்க்கையில் நல்ல உறவு அமையாதது, மன்றோவின் வாழ்வில் ஒரு சோகம்தான். நடிக்க வருவதற்கு முன்பு செய்த திருமணத்தைத் தவிர்த்து, 1954-ம் ஆண்டு பேஸ்பால் வீரரான ஜோ டிமாக்கியோ என்பவரை திருமணம் செய்தார். ஒன்பது மாதங்களே இந்த திருமண பந்தம் நீடித்தது. பின்னர் 1956-ல் எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான ஆர்தர் மில்லரை மணந்தார். 1961 வரை இந்த வாழ்க்கை நீண்டது. தவிர மார்லன் பிராண்டோ, பிராங்க் சினிடரா என்ற பாடகர், எலிய காஜன் என்ற இயக்குனர் ஆகியோருடன் இவருக்கு உறவு இருந்தது.

1962-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி அமெரிக்க அதிபரான ஜான் எப்.கென்னடியின் பிறந்த நாளின் போது, இப்போதும் எல்லோரும் பாராட்டும் சிறந்த நடனத்தை ‘ஹேப்பி பர்த்டே மிஸ்டர் பிரசிடெண்ட்’ என்று பாடிக் கொண்டே ஆடினார். இதுபோன்ற அரைகுறை உடையில் ஒரு நடனத்தை மேல்தட்டு மக்கள் எப்போதும் பார்த்ததே இல்லை என்னும்படியாக அது இருந்தது.

அதே வருடம் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி மர்லின் மன்றோ, லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்த தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு அருகில் காலியான தூக்க மாத்திரை பாட்டில் ஒன்று கிடந்தது. இவர் எந்த காரணத்திற்காகவோ கொல்லப்பட்டு இருக்கலாம் என்றொரு வதந்தியும் நாடெங்கும் பரவியது. ஆனால் இந்த வதந்தி அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டு, அதிக தூக்க மாத்திரை விழுங்கியதால் இறந்து போனார் என்பது தெளிவாக்கப்பட்டது.

இறப்பதற்கு முந்தைய வருடம் வரை அவருக்கு சொந்த வீடே இல்லை. பிறகுதான் வாங்கினார். அவ்வீட்டில் தான் விரும்பிய சில முக்கிய பொருட்களை மட்டும் நிரந்தரமாக வைத்து இருந்தார். அவரைப் போன்ற கவர்ச்சியான நடிகை முன்னும் பின்னும் யாருமே இல்லை. இவரது கவர்ச்சியான உடல், பேச்சு போன்றவை மிகவும் அபூர்வமானது. பிரபல நடிகையான மர்லின் மன்றோ இறந்து, 50 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவரது குரல், அழகு, கவர்ச்சியான பார்வை போன்றவற்றை அமெரிக்கர்கள் மறக்கவே இல்லை.

கைவிடப்பட்ட திரைப்படம்

தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சிறு கசப்பான அனுபவங்களால், அவரது கடைசி இரண்டு படங்கள் சரியாக போகவில்லை. 1962-ம் ஆண்டு ‘சம்திங்ஸ் காட் டூ கிவ்’ (Something’s Got to Give) என்ற படத்தில் நடித்தார். சரியாக படப்பிடிப்புக்கு வராததாலும், சக நடிகர்களுடன் சச்சரவு போன்ற காரணத்தாலும் அவர் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். மர்லின் இல்லாமல் நானும் நடிக்க மாட்டேன் என்று நடிகர் டீன் மார்ட்டினும் ஒதுங்கிக்கொண்டதால், அந்தப் படமே கைவிடப்பட்டுவிட்டது.