இளையராஜா இசையில், சாமியின் ‘அக்கா குருவி’ 500 வருடங்கள் பழமையான வீடுகளில் படப்பிடிப்பு
புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு போட்டிபோட்ட படம், ‘சில்ரன் ஆப் ஹெவன்’. இந்த படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது.
‘சில்ரன் ஆப் ஹெவன்’ படத்தின் தமிழ் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ ஆகிய படங்களை டைரக்டு செய்த சாமி வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது::-
“நான் இயக்கிய 3 படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்க போகிறேன். கதை 80-களில் நடப்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்யவேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்ற ஊரை தேர்ந்தெடுத்தேன். அவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால் நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம்தான் சரியானது என்று படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறோம்.
இந்த படத்துக்கு இசையமைக்க இளைய ராஜாவை அணுகினேன். அவர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டு காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக்கொண்டார். தற்போது பின்னணி இசையமைக்கும் பணியை தொடங்கிவிட்டார்.
படத்துக்கு, ‘அக்கா குருவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை என் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து உள்ளேன்.
படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வு நடத்தி, இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் அம்மா கதாபாத்திரத்துக்கு நடன கலைஞர் தாரா ஜெகதாம்பா, அப்பா கதாபாத்திரத்துக்கு செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.”
Related Tags :
Next Story