சர்ச்சை வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட நடிகை சார்மி
தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். படங்கள் தயாரிக்கவும் செய்கிறார்.
சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து சார்மி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் ஒருவருக்கும், டெல்லியில் இன்னொருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நடிகை சார்மி டிக்டாக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “கொரோனா வைரஸ் டெல்லிக்கும், தெலுங்கானாவுக்கும் வந்து விட்டதாக அறிந்தேன் நண்பர்களே. வாழ்த்துகள்” என்று சந்தோஷப்படுவதுபோல் பேசி இருந்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து சார்மிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. சர்ச்சை வீடியோவுக்கு சார்மி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். “அந்த வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்வுப்பூர்வமான விஷயத்தில் பக்குவம் இல்லாமல் நடந்துகொண்டேன். இனிமேல் எனது நடவடிக்கைகளில் கவனமாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story