கொரோனாவை தடுக்கும் பாரம்பரிய முறை -நடிகை பிரணிதா


கொரோனாவை தடுக்கும் பாரம்பரிய முறை -நடிகை பிரணிதா
x
தினத்தந்தி 19 March 2020 10:45 PM GMT (Updated: 2020-03-19T23:54:58+05:30)

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் நாம் கடைபிடிக்கும் பாரம்பரிய முறை என்று நடிகை பிரணிதா தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் வரிந்து கட்டி வேலை செய்கின்றன. இந்த வைரசால் ஏற்படப்போகும் உயிரிழப்புகள் பற்றி நாள்தோறும் வெளியாகும் கணிப்புகள் குலை நடுங்க வைப்பதாக உள்ளன.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைவாகவே உள்ளது என்றும், இதற்கு காரணம் நாம் கடைபிடிக்கும் பாரம்பரிய முறை என்றும் சூர்யாவுடன் ‘மாஸ்’ மற்றும் கார்த்தி ஜோடியாக ‘சகுனி’ படங்களில் கதாநாயகியாக நடித்த பிரணிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“இந்துக்கள் கைகூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம் சொன்னதை பார்த்து சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் இந்துக்கள் கைகளையும் கால்களையும் கழுவி சென்றதை பார்த்து சிரித்தார்கள். விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். மரங்களையும் காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்.

இந்துக்கள் சைவ உணவை மட்டும் சாப்பிடுவதை பார்த்து சிரித்தார்கள். யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள். இறந்தவர்களை எரிப்பதை பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு குளிப்பதை பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. இந்த வழக்கம்தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது. இது மதம் இல்லை. வாழ்க்கையின் வழி.”

இவ்வாறு பிரணிதா கூறியுள்ளார்.

Next Story