ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை - ஏ.ஆர். ரகுமான்


ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை - ஏ.ஆர். ரகுமான்
x
தினத்தந்தி 23 April 2020 12:04 PM GMT (Updated: 23 April 2020 12:04 PM GMT)

ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா தடுக்க மே 3-ம்  தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். தொழில்நிறுவனங்கள் இயங்காததால் 
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல், ஊதியமும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். வீட்டு வாடகை, வங்கி லோன், தினசரி வீட்டு செலவு எதற்கும் வழியில்லாமல் மக்கள் வேதனையுடன் முடங்கி கிடக்கிறார்கள்.

இதற்கிடையே சாமானிய மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் வேலைக்கு சென்றால்தான் உணவு என்ற நிலையில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது. மத்திய மாநில 
அரசுகள் உதவிகளை அளித்து ஆறுதல் அளித்து வருகிறது. எனினும் இந்த உதவியும் போதாத நிலையில மக்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை என ஏ.ஆர்.ரகுமான் கவலை தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச இசையமைப்பாளர்களுடன் இணைந்து 
‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற பாடலுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 

இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதி உள்ளார்.

மனிதநேய ஆர்வலர் கென் கிராகனின் முன் முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்குகிறார்  ஏ.ஆர். ரகுமான். இதன்மூலம் வரும் தொகையை காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பூமி தினத்தை முன்னிட்டு, இன்ஸ்டாகிராம் நேரலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நேரலையில் இந்த திட்டத்தின் முக்கிய அங்கம் வகிக்கும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் நீல் மோர்கன் இணைந்து இப்பாடல் உருவாக்கப்பட்டது குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் இருவரும் உரையாற்றினர்.

அப்போது பேசிய மோர்கன், "ஊரடங்கு குறித்து பூமியின் மாசு குறைந்திருக்கிறது. தூய்மையான காற்று கிடைக்கிறது. பூமி புதுப்பித்துக்கொள்வது சிறப்பாக இருக்கிறது", என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்,

நான் ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை பற்றியே நினைக்கிறேன். 

அன்றாட உணவு தேவைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் நிறைய மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களை நினைக்கும் போது இரவில் தூங்க முடிவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் என்ற எண்ணமே என்னுள் தோன்றுகிறது. இந்த பூமியில் அவர்களும் ஒரு பகுதியினர் என உருக்கமாக தெரிவித்தார்.

Next Story