பிரபாகரன் பெயர் விவகாரம்: தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர் - பிரசன்னா


பிரபாகரன் பெயர் விவகாரம்: தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர் - பிரசன்னா
x
தினத்தந்தி 28 April 2020 5:29 AM GMT (Updated: 28 April 2020 5:29 AM GMT)

பிரபாகரன் பெயர் விவகாரத்தில் தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

சென்னை,

துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி உருவகேலி செய்து இருப்பதாக ஒருவர் புகார் கூறியதையடுத்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. படக் குழுவினரை சமூக வலைத்தளத்தில் பலரும் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து துல்கர் சல்மான் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“வரனே அவஷ்யமுண்டு படத்தில் இடம்பெற்றுள்ள பிரபாகரன் நகைச்சுவை காட்சி தமிழ் மக்களை அவமதிப்பதுபோல் இருப்பதாக என்னிடம் சிலர் தெரிவித்தனர்.

அந்த காட்சியை வைத்ததில் உள்நோக்கம் இல்லை. அந்த பெயரை கேரளாவில் சகஜமாக பயன்படுத்துகின்றனர். யாரையும் குறிப்பிட்டு அந்த காட்சியை வைக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே பலர் வெறுப்பு காட்டுகிறார்கள்.

இந்த பிரச்சினையில் எங்கள் தந்தைகளையும், மூத்த நடிகர்களையும் இழுக்காதீர்கள். இதனால் காயப்பட்டு உள்ளதாக கருதும் தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் படங்களில் யாரையும் காயப்படுத்துவது இல்லை இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தநிலையில், தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்க, அவரிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து பிரசன்னா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

 "ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அன்பானவர்களே... அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

மேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட டுவீட்டைக் குறிப்பிட்டு மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. 

தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர் என்று பிரசன்னா கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story