கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்
சென்னையில் இருந்து கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்.
கோத்தகிரி,
தமிழ் திரைப்பட நடிகரும், பா.ஜனதா கட்சியின் பேச்சாளருமான ராதாரவி, கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எம்.கைகாட்டியில் மார்வளா செல்லும் சாலையில் உள்ள தனது சொகுசு பங்களாவுக்கு சென்றார். அங்கு அவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் நடிகர் ராதாரவியின் சொகுசு பங்களாவுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் அனுமதி பெற்று வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை ராதாரவி, அவரது குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கான கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் பங்களாவுக்கு திரும்பி சென்றனர். அங்கு ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story