உலக நடப்புகளால் கொதிப்பு: முகத்தில் கரிபூசி புகைப்படம் வெளியிட்ட தமன்னா


உலக நடப்புகளால் கொதிப்பு: முகத்தில் கரிபூசி புகைப்படம் வெளியிட்ட தமன்னா
x
தினத்தந்தி 8 Jun 2020 7:09 AM IST (Updated: 8 Jun 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

உலக நடப்புகளால் கொதிப்படைந்த நடிகை தமன்னா முகத்தில் கரிபூசி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் பசியால் சுற்றி திரிந்த கர்ப்பிணி யானைக்கு பழத்தில் வெடி பொருட்களை வைத்து கொடுத்து படுகொலை செய்து விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதை அரக்கத்தனம் என்று என்று நடிகர்-நடிகைகள் கண்டித்தனர். அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கழுத்தை வெள்ளை போலீஸ்காரர் முட்டிக்காலால் மிதித்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சமூக அவலங்கள் நடிகை தமன்னாவை கொதிப்படையை வைத்துள்ளது.

தனது முகத்தில் கரியை பூசிக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். கர்ப்பிணி யானை, கறுப்பின இளைஞர் கொலைகளை கண்டிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை அவர் வலைத்தளத்தில் பகிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. புகைப்படத்தோடு, “உங்களுடையை மவுனம் உங்களை காப்பாற்றாது.

மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் உயிர்கள் முக்கியம். எந்தவிதமான படைப்பையும் முடக்குவது உலகளாவிய விதிமுறைக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்“ என்று பதிவிட்டுள்ளார். தமன்னாவுக்கு விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பர படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story