ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக இந்தி திரையுலகில் சதி: கவிஞர் வைரமுத்து கண்டனம்


ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக இந்தி திரையுலகில் சதி: கவிஞர் வைரமுத்து கண்டனம்
x
தினத்தந்தி 27 July 2020 1:08 AM GMT (Updated: 27 July 2020 1:08 AM GMT)

ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக இந்தி திரையுலகில் சதி நடந்திருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தி பட உலகில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “ இந்தி பட உலகில் எனக்கு எதிராக நடக்கும் செயல்கள் குறித்து நான் கவலைப்படவில்லை எனக்கு விதிமேல் நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடம் இருந்து வருகிறது. யார் மீதும் வெறுப்பு இல்லை என்றும்” அவர் கூறியுள்ளார்.

ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் ஷாருக்கானின் தில் சே, அமிர்கானின் லகான். கஜினி, ஹிருத்திக் ரோஷனின் ஜோதா அக்பர், அபிஷேக் பச்சனின் குரு உள்பட 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார். ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு படங்கள் குறைந்தன. இந்தி பட உலகில் அவரது வாய்ப்புகளை தடுக்க சதி நடந்து இருப்பது இப்போது அம்பலமாகி உள்ளது. சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஹேஷ்டேக்கு உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருது பெற்றவருக்கே இந்த கதியா, இது இந்தி பட உலகினருக்கு அவமானம் என்று பதிவிடுகிறார்கள். கவிஞர் வைரமுத்து டுவிட்டரில், “அன்பு ரகுமான் அஞ்சற்க. வட இந்திய கலையுலகம் தமிழ் நாட்டு பெண்மான்களை பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான் நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை” என்று கூறியுள்ளார்.


Next Story