பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்


பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்
x
தினத்தந்தி 31 July 2020 9:41 PM GMT (Updated: 31 July 2020 9:41 PM GMT)

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கனவே விஷால் தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்துள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்னொரு புதிய சங்கம் உருவாகி உள்ளது.

இந்த சங்கத்துக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் ஆகியோரும் பொதுச்செயலாளராக டி.சிவாவும் பொருளாளராக தியாகராஜனும் இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சங்கத்தின் ஆதரவு தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, “கொரோனாவால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யமுடியவில்லை. எனவே அவர்கள் தேவைகளை நிறைவு செய்யவும் படம் எடுப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த சங்கம் பாடுபடும். படம் எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்காகவே இந்த சங்கம் உருவாகிறது. உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போட்டியான சங்கம் இல்லை” என்றார்.

Next Story