‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு


‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 3 Sep 2020 12:00 AM GMT (Updated: 2 Sep 2020 8:46 PM GMT)

இந்திய விமானப்படையை கதைக்களமாக கொண்ட ‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட “குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள்” என்கிற திரைப்படம் கடந்த மாதம் 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் பாலின பிரச்சினைகளை சுட்டி காட்டுவதாகவும், இந்திய விமானப்படையை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டிய மத்திய அரசு, படத்துக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி ராஜு சக்தர் நேற்று விசாரித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சக்தர், ‘படம் ஓ.டி.டி.யில் வருவதற்கு முன்பே ஏன் கோர்ட்டை அணுகவில்லை? என்று மத்திய அரசை கேட்டார். படம் ஏற்கனவே திரையிடப்பட்டு விட்டதால் தற்போது தடை உத்தரவு வழங்க முடியாது என்று கூறிய அவர், பட தயாரிப்பு நிறுவனம், படத்தின் இயக்குனர்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்பட படத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், இந்த படம் முன்னாள் விமானப்படை லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால், அவரையும் வழக்குக்கு உட்படுத்த வேண்டும் என்று அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Next Story