‘சூரரைப் போற்று’ நிஜ நாயகனின் வெற்றிக் கதை


‘சூரரைப் போற்று’ நிஜ நாயகனின் வெற்றிக் கதை
x
தினத்தந்தி 6 Dec 2020 5:21 PM GMT (Updated: 6 Dec 2020 5:21 PM GMT)

ஏழைகளாலும் விமானத்தில் செல்ல முடியும் என்ற கதைப் பின்னணியைக்கொண்டது, சூரரைப் போற்று சினிமா. சூர்யா அதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

உண்மை சம்பவமான அந்த கதையின் நிஜ ஹீரோவாக இருப்பவர் கேப்டன் கோபிநாத். அவர் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கான விமான பயணத்தை சாத்தியமாக்கி, வரலாற்றில் இடம்பிடித்தவர். கர்நாடக மாநிலத்தின் கிராமப்பகுதியான ஹாஸனில் இருந்து வானத்தை எட்டிப்பிடிக்கும் சாதனையை நிகழ்த்திய கேப்டன் கோபிநாத் சூரரைப்போற்று சினிமாவை பற்றியும் தனது வாழ்க்கையை பற்றியும் விவரிக்கிறார்!

உங்கள் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கும் இந்த சினிமாவைப் பார்த்து ரசித்தீர்களா?

எனது சுயசரிதையின் ஆத்மாவுக்கு இழப்பு ஏற்பட்டுவிடாத அளவுக்கு இந்த சினிமாவை தயாரித்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவிற்கான சில கற்பனைகளை கலந்திருக்கவும் செய்திருக்கிறார்கள். ‘லட்சியத்திற்கான பயணத்தை பாதி வழியில் நிறுத்திவிடக்கூடாது’ என்ற எனது புத்தகத்தின் மையக் கருத்து அப்படியே சினிமாவிலும் இருக்கிறது.

எனது மனைவி பார்கவியுடன் அந்த சினிமாவை பார்த்தேன். சில காட்சிகளை பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். சில காட்சிகளில் அழுதோம். பைத்தியக்காரத்தனமாக தெரியும் கனவுகளையும் சாத்தியமாக்க முடியும் என்பது சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி. எனது மனைவியின் கதாபாத்திரத்தை அபர்ணா பாலமுரளியும் சிறப்பாக செய்திருக்கிறார்.

கிராமத்து பெண்ணாக இருந்தாலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் பெண் தொழில்முனைவோராகிவிட முடியும் என்பதை நிரூபித்தவர் பார்கவி. அவர் தொடங்கிய ‘பன் வேல்டு’ பேக்கரி வெற்றிகரமான தொழில் நிறுவனமாக வளர்ந்தது. அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் சினிமாவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சூர்யாவுக்கு ஈடுகொடுத்து அபர்ணாவும் நடித்திருக்கிறார். அந்த விஷயத்தில் டைரக்டர் சுதா கொங்கரா வெற்றி பெற்றிருக்கிறார். எங்கள் மகள் பல்லவி பிரான்சில் விமானத்துறையில் பணிபுரிகிறார். இளைய மகள் கிருத்திகா பெங்களூருவில் உள்ளார். இருவரும் டெக்கானுடன் செயல்பட்டவர்கள். அவர்களுக்கும் சினிமா பிடித்திருக்கிறது.

உங்கள் வாழ்க்கை வரலாறு வெளியாகி பல வருடங்கள் ஆன பின்புதானே சினிமாவாகியிருக்கிறது?

புத்தகத்தை சினிமாவாக்கும் உரிமைகேட்டு கிரிஷ் கர்னாட் என்னை அணுகினார். என் கதாபாத்திரத்திற்காக நானே நடிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கும் சம்மதித்திருந்தேன். அவர் நோய்வாய்ப்பட்டதும் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்பு அகாடமி விருது பெற்ற குனீத் மோங்கா எனது புத்தகத்தை எல்லா இந்திய மொழிகளிலும் சினிமாவாக்க முன்வந்தார். வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்த அவர் அதற்கு பொருத்தமானவர் என்று நான் கருதினேன். டைரக்டரை அவரே தீர்மானித்தார்.

புத்தகத்தை படித்த பின்பு சூர்யா பெங்களூரு வந்திருந்தார். உண்மையை சொன்னால் அதற்கு முன்பு அவரது சினிமா எதையும் நான் பார்த்திருக்கவில்லை. நான் சத்யஜித்ரேயின் படங்களையும், ஷியாம் பெனகலின் படங்களையும்தான் நிறைய பார்த்திருக்கிறேன். புத்தகத்தில் இருக்கும் யதார்த்தம் காப்பாற்றப்படவேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் நான் சூர்யாவுக்கு வைத்தேன்.

நீங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுங்கள்?

எனது தந்தை கிராமத்து பள்ளி ஆசிரியர். நான் வீட்டிலே அடிப்படையான கல்வியை கற்றுவிட்டு, நேரடியாக ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பின்பு ராணுவத்தினருக்கான பள்ளியில் சேர்ந்து படித்தேன். பின்பு தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தேன். 28 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்புதான் ஏழைகளுக்கும் விமான பயணத்தை சாத்தியப்படுத்த வேண்டும் என்ற கனவு உருவானது. 1997-ல் கேரள நண்பரான கேப்டன் கே.ஜெ.சாமுவேலுடன் இணைந்து ஏர் டெக்கான் தொடங்கினேன். இந்தியாவின் முதல் சார்ட்டட் ஹெலிகாப்டர் சர்வீஸ் ஆக அது இருந்தது. ‘மேப்பில் இடத்தை சுட்டிக்காட்டுங்கள். உங்களை அங்கு கொண்டுபோய் சேர்ப்போம்’ என்பது கொள்கை முழக்கமாக இருந்தது.

பட்ஜெட் ஏர்லைன்ஸ் என்ற திட்டம் எங்கே, எப்போது உருவானது?

நான் அமெரிக்காவில் ஓய்வு காலத்தை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அந்த திட்டம் உருவானது. நாங்கள் இருந்த சிறிய விமான நிலையப்பகுதியில் தினமும் ஆயிரத்திற்கு அதிகமாக விமானங்களும், லட்சத்திற்கு மேற்பட்ட பயணிகளும் வந்துகொண்டிருந்தார்கள். இந்தியாவில் உள்ள 40 விமானநிலையங் களிலும்கூட அந்த அளவுக்கு பயணிகள் வருவதில்லை. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் தினமும் 40 ஆயிரம் விமானங்கள் இயக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் இந்தியாவில் 420 விமானங்களே இயங்கிக்கொண்டிருந்தன. பஸ்களிலும், ரெயில்களிலும் பயணப்படுபவர்களில் 5 சதவீதத்தினர் விமானத்திற்கு வந்தால் ஒரு வருடத்துக்கு 50 கோடி பயணிகள் விமான பயணத்திற்கு அதிகம் கிடைப்பார்கள் என்ற புள்ளிவிவரங்களை சேகரித்தோம். இந்தியா திரும்பிய பின்பும் மனதில் நெருப்பாக இருந்த அந்த திட்டம் 2003-ல் நனவானது. ஐரோப்பாவில் இருக்கும் ஈசி ஜெட், ராயல் ஏர் போன்றவை அதற்கு முன்னோடி என்று சொல்லலாம்.

ஒரு ரூபாய்க்கு கூட விமான டிக்கெட் கொடுத்தீர்களே?

பரம ஏழைக்கு கூட விமானத்தில் செல்ல உரிமை உண்டு என்பதை நிலைநாட்டுவதற்கே ஒரு ரூபாய் டிக்கெட் என்ற திட்டத்தை செயல்படுத்தினேன். முதன் முதலில் பதிவு செய்பவர்களுக்காக குறைந்த அளவு டிக்கெட்டுகளை அதற்காக ஒதுக்கிவைத்தேன். பின்பு பதிவு செய்பவர்களுக்கு அதிக கட்டணம் என்றாலும், அது அந்த காலகட்டத்தில் இருந்த விமான கட்டணங்களில் பாதி அளவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரம் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு உணவு தேவையில்லை. அப்படியே தேவைப்பட்டால் அவர்கள் விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். அதில் மிச்சம் பிடிக்கும் பணத்தை எல்லாம் பயண கட்டணத்தில் குறைத்தோம். ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி 30 லட்சம் பேர்களாவது டெக்கானில் பயணித்திருப்பார்கள்.

அதன் பின்பு என்ன நடந்தது?

2003-ல் 48 இருக்கைகள் அமைந்த ஆறு இரட்டை என்ஜின் டர்போப்ரோப் விமானங்களை கொண்டு ஏர் டெக்கான் செயல்படத் தொடங்கியது. 2007 ஆனபோது 67 விமான நிலையங்களில் இருந்து சிறிய நகரங்களுக்கும் சேர்த்து தினமும் 380 விமானங்கள் இயக்கினோம். முதலில் சராசரி 2 ஆயிரம் பயணிகள் என்ற நிலையில் இருந்து நான்கு வருடங்களில் சராசரி 25 ஆயிரம் பயணிகள் என்ற நிலையை எட்டினோம். பின்பு மற்ற விமான நிறுவனங்களும் எங்கள் பாதையை பின்பற்றின. அதனால் போட்டி அதிகமாகி, கூடுதல் பணபலம் தேவைப்பட்டது.

அப்போதுதான் 2007-ல் விஜய்மல்லையாவின் கிங் பிஷர் குரூப்புக்கு கைமாற்றினோம். டெக்கானின் குறைந்த கட்டண விமான பயணத் திட்டம் ‘கிங் பிஷர் ரெட்’ என்ற பெயரில் ரீ பிராண்ட் செய்யப்பட்டது. பின்பு கார்கோ சர்வீஸ்க்காக டெக்கான் 360-ஐ தொடங்கினோம். அப்போதும் பண நெருக்கடி ஏற்பட்டதால் விமானத்துறை தொழிலில் இருந்து விலகினேன்.

2009-ல் கர்நாடக சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டேன். 2014-ல் ஆம் ஆத்மி சார்பில் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டேன். இரண்டிலும் தோல்வியடைந்தேன். இப்போது நான் எழுத்து உலகத்தில் இருந்துகொண்டிருக்கிறேன். வயது 69 ஆகிவிட்டது. தொழில்துறைக்கு இனி திரும்பிப்போகமாட்டேன். எனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்து இளைய தலைமுறையினருக்கு ‘வெற்றிக்கான பயணத்தில் நீங்கள் வீழ்வீர்கள். ஆனால் தளர்ந்துவிடாதீர்கள். எழுந்து மீண்டும் முன்னோக்கி செல்லவேண்டும். சென்றால், இறுதியில் வெற்றி உங்கள் வசப்படும்’ என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Next Story