விஷாலை சாடிய காயத்ரி ரகுராம்


விஷாலை சாடிய காயத்ரி ரகுராம்
x
தினத்தந்தி 30 May 2021 10:45 PM GMT (Updated: 2021-05-31T00:08:38+05:30)

ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் வற்புறுத்தினர்.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் வற்புறுத்தினர்.

நடிகர் விஷாலும் இதனை கண்டித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘'பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலைகுனிய வைப்பது மட்டுமன்றி அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. இந்த குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

விஷாலுக்கு பதிலடி கொடுத்து நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''முதலில் சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களையும் கண்டியுங்கள். சினிமாவில் புதிதாக வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். முன்னணி நடிகைகளுக்கும் தொல்லைகள் கொடுக்கப்படுவதை பாருங்கள். உங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமா துறையில் உதவி தேவைப்படும் பெண்களுக்காக உங்கள் வீரத்தை காட்டி இருக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story