கமலின் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் வருமா?


கமலின் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் வருமா?
x
தினத்தந்தி 8 Jun 2021 4:27 AM GMT (Updated: 2021-06-08T09:57:56+05:30)

கமலின் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு நடிகர் ஸ்ரீமன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, லாரன்சின் காஞ்சனா மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வந்தன.

தற்போது கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. கமல்ஹாசன் நடித்து 2002-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த படத்தில் கமலுடன் ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். மனைவிகளுக்கு தெரியாமல் சுற்றுலா செல்லும் கணவர்கள் பிரச்சினையில் சிக்குவதும் அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதும் கதை. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீமன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னிடம் நிறைய பேர் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனக்கு தெரிந்த வகையில் இதற்கான பதில் என்னவென்றால் கமல்ஹாசன் முடிவு செய்தால் அது நடக்கும். இது நடக்குமா? இல்லையா என்று உங்களைப்போல் படக்குழுவினரும் காத்து இருக்கிறார்கள்'’ என்று கூறியுள்ளார்.

Next Story