‘கே.ஜி.எப்.-2' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு


‘கே.ஜி.எப்.-2 படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 9:05 PM GMT (Updated: 2021-08-23T02:35:27+05:30)

கே.ஜி.எப்.-2 படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்த ‘கே.ஜி.எப்.’ படம் கன்னடம் உள்பட 5 மொழிகளில் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் சாதனை படைத்தது. கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் யஷ், இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் மிகவும் பிரபலமானார். முதல் பாகத்தை தொடர்ந்து  ‘கே.ஜி.எப்.’ படத்தின் 2-ம் பாகம்  அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் யஷ், இந்தி நடிகர் சஞ்சய்தத், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.  இதுவும் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘கே.ஜி.எப்.-2’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ‘கே.ஜி.எப்.-2’ படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

  ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், இந்த படம் வெளியாகமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தியேட்டர்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ‘கே.ஜி.எப்.-2’ ரிலீஸ் தேதியை நடிகர் யஷ் அறிவித்துள்ளார். அதாவது,  ‘கே.ஜி.எப்.-2’ வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதை நடிகர் யஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story