விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்


விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்
x
தினத்தந்தி 27 Sep 2021 5:29 PM GMT (Updated: 27 Sep 2021 5:29 PM GMT)

கட்சி கூட்டங்களில் தனது பெயரை பயன்படுத்த தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், ‘விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது' என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் வழக்கு
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்திவந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலான அமைப்பை அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்தார்.தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.இந்தநிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் விஜய் சென்னை நகர 5-வது உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கலைக்கப்பட்டது
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோர் தரப்பில் வக்கீல் எம்.டி.அருணன் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-
28.2.2021 அன்று விஜய் மக்கள் இயக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது. தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இல்லை. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தீர்மானம் சங்கங்களின் பதிவாளருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

விசாரணைக்கு பின்பு வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story