அஜித் படத்துக்கு முன்னுரிமை!


அஜித் படத்துக்கு முன்னுரிமை!
x
தினத்தந்தி 1 March 2020 8:30 AM IST (Updated: 29 Feb 2020 5:19 PM IST)
t-max-icont-min-icon

1995-ல் `முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், அருண்குமார். நடிகர் விஜயகுமாரின் மகன்.

அருண்குமார் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், பிரபல நடிகரின் வாரிசாக இருந்தாலும், முன்னணி நாயகனாக முடியாமல், அந்த பட்டியலில் இடம் பிடிக்க போராடி வந்தார்.

தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார். அதன்பிறகு இவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமைந்தன. குறிப்பாக, அஜித்குமாரின் `என்னை அறிந்தால்' படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த பின், இவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது.

தொடர்ந்து அவர் நடித்த `தடம்,' `குற்றம் 23,' `செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்களின் வெற்றிகள், அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. சமீபத்தில் திரைக்கு வந்த `மாபியா' படத்திலும் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த அருண் விஜய்யிடம், ``உங்களுக்கு அஜித்குமாருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பும், மாபியா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பும் ஒரே சமயத்தில் வந்தால், எந்த வாய்ப்பை ஏற்பீர்கள்?'' என்று கேட்டார்.

அருண்விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல், “மாபியா-2 எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் அஜித் துடன் நடிக்கும் வாய்ப்பு அபூர்வமாகவே அமையும். எனவே அந்த படத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்'' என்று பதில் அளித்தார், அருண் விஜய்!

Next Story