விமர்சனம்
சாதி வெறி பிடித்த கல்லூரி முதல்வரும், அவரை எதிர்த்து போராடும் பேராசிரியரும் - அடுத்த சாட்டை விமர்சனம்

சாதி வெறி பிடித்த கல்லூரி முதல்வரும், அவரை எதிர்த்து போராடும் பேராசிரியரும் - அடுத்த சாட்டை விமர்சனம்
சமுத்திர கனி அதுல்யா அன்பழகன் ஜஸ்டின் பிரபாகர் ராசாமதி
சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் விமர்சனம்
Chennai
கதையின் கரு:  ஒரு தனியார் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார், தம்பிராமய்யா. சாதி வெறி பிடித்தவர். அவர் எந்த சாதிக்காரர் என்பது தெரிகிற மாதிரி கையில் கயிறு கட்டிக் கொள்கிறார். அவரைப்போல் தன் சாதியை சேர்ந்த மாணவர்கள் கைகளிலும் கயிறு கட்ட வைக்கிறார். தனது சாதியை சேர்ந்த மாணவர்களிடம் கலகலப்பாக பழகுகிறார். மற்ற சாதி மாணவர்களிடம் எரிந்து விழுகிறார்.

இவருடைய சுபாவத்துக்கு நேர் எதிரானவராக-சாதியை எதிர்ப்பவராக இருக்கிறார், அதே கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சமுத்திரக்கனி. “கல்லூரியில் சிஸ்டமே தப்பாக இருக்கிறது. கற்றுக் கொடுப்பவனை விட, தினம் தினம் கற்றுக் கொள்பவன்தான் உண்மையான ஆசிரியர்” என்பது இவரின் கொள்கை. இவர் மீது அநியாயமாக பழிசுமத்தி, கல்லூரி நிர்வாகம் ‘சஸ்பெண்டு’ செய்கிறது.

இதை எதிர்த்து மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து போராடுகிறார்கள். மாணவர்கள் கூட்டத்துக்குள், தம்பிராமய்யா ஏற்பாடு செய்த ரவுடிகள் புகுந்து கலவரத்தை தூண்டுகிறார்கள். இதற்கிடையில், தம்பிராமய்யாவின் சாதி வெறி காரணமாக ஒரு ஏழை மாணவர் பலியாகிறார். அதன் பிறகாவது தம்பிராமய்யா திருந்தினாரா? ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட சமுத்திரக்கனி என்ன ஆகிறார்? என்பது மீதி கதை. இந்த கதைக்குள், யுவன்-அதுல்யா ரவியின் மென்மையான காதல் கதையும் இருக்கிறது.

சமுத்திரக்கனி நேர்மையான தமிழ் பேராசிரியராக வருகிறார். இவருக்கும், கல்லூரி பேராசிரியை ராஜஸ்ரீ பொன்னப்பாவுக்கும் இடையேயான காதல், தாமரைப்பூ தண்ணீராக ஒட்டியும், ஒட்டாமலும், புதுசாக எழுதிய கவிதை போல் இருக்கிறது. “தமிழ் ஆசிரியர் என்றால் வெள்ளை வேட்டி, நெற்றி நிறைய விபூதி என கோழையாக இருப்பார் என்று நினைத்தாயா?” என்று கேட்டு, எதிரிகளை சமுத்திரக்கனி துவம்சம் செய்யும் இடத்தில், கைதட்ட தோன்றுகிறது.

நல்லவேளையாக இன்னொரு காதல் ஜோடியான யுவன்-அதுல்யா ரவிக்கு ‘டூயட்’ இல்லை. இவர்களின் காதலுக்கு வெகு ஜாக்கிரதையாக முற்றுப்புள்ளி வைத்திருப்பது, புத்திசாலித்தனம். அதுல்யா ரவி, ‘பளிச்’ என அழகாக இருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை. தம்பிராமய்யா அடிக்கடி குரலை மாற்றி வசனம் பேசிக்கொண்டே நடிப்பதில், இன்னொரு எம்.ஆர்.ராதா. யுவன், எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.

ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ரசனையை கூட்டுகின்றன. எம்.அன்பழகன் டைரக்டு செய்திருக்கிறார்.

“மாணவர்களுக்கு வெறும் படிப்பு மட்டும் போதாது. எதிர்கால வாழ்க்கைக்கு அனுபவ கல்வி அவசியம் தேவை” என்ற கருத்தை வெற்றிலையில் தேன் தடவிய மருந்தாக கொடுத்து இருக்கிறார். வண்டி வண்டியாக வரும் வசன காட்சிகளை சுருக்கி இருக்கலாம். ‘சாட்டை’யை விட, ‘அடுத்த சாட்டை’யில் வீரமும் இருக்கிறது. விவேகமும் நிறைய இருக்கிறது.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்