திரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் - திரெளபதி


திரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் - திரெளபதி
x
தினத்தந்தி 1 March 2020 6:26 AM IST (Updated: 1 March 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

குடிநீரை விற்று பணம் பார்க்கும் எண்ணத்துடன் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம், நிலத்தை வாங்குகிறார், ஒரு மோசமான தொழில் அதிபர். படம் "திரெளபதி" விமர்சனம்

கதை, சேந்தமங்கலம் என்ற கிராமத்தில் தொடங்குகிறது. குடிநீரை விற்று பணம் பார்க்கும் எண்ணத்துடன் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம், நிலத்தை வாங்குகிறார், ஒரு மோசமான தொழில் அதிபர். அதற்கு அந்த கிராமத்து தலைவரும், அவருடைய அண்ணன் மகளும், மருமகனும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அவர்களை குடும்பத்தோடு அழிக்க ‘ஸ்கெட்ச்’ போடுகிறார், தொழில் அதிபர். ஊர் தலைவரின் மகளை காதல்வசப்படுத்தி விடும்படி, வேறு சாதியை சேர்ந்த இளைஞரை ‘செட்-அப்’ செய்து ஏவி விடுகிறார், தொழில் அதிபர். ஊர் தலைவரின் மகள், அந்த இளைஞரை பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஜோடித்து வதந்தியை பரப்புகிறார்கள்.

அதை கேள்விப்பட்ட ஊர் தலைவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய மகள் மீதும், அண்ணன் மகள் மீதும் தொழில் அதிபரும், அவருடைய கைத்தடியும் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில், மகள் மரணம் அடைகிறாள். மனைவி, மைத்துனி இரண்டு பேரையும் ஆணவ கொலை செய்ததாக ஊர் தலைவரின் மருமகன் மீது கொலைப்பழி சுமத்தி, ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அந்த பழியில் இருந்து மருமகன் எப்படி தப்பிக்கிறார்? கர்ப்பிணியாக இருக்கும் அவருடைய மனைவி என்ன ஆனார்? என்பது இருக்கை நுனியில் அமரவைக்கும் ‘கிளைமாக்ஸ்.’

ஊர் தலைவரின் மருமகனாக-வீர விளையாட்டை கற்றுக்கொடுக்கும் மாஸ்டராக-கதையின் நாயகனாக ரிஷி ரிச்சர்ட் (அஜித்குமாரின் மைத்துனர்), மிக பொருத்தமான தேர்வு. அவருடைய கட்டுமஸ்தான உடம்பும், கம்பீரமான தோற்றமும், திறமையான நடிப்பும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறது. மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறும் காட்சியிலும், மனைவி பற்றிய மர்மம் விலகுகிறபோதும், உருக வைக்கிறார்.

இவருடைய மனைவியாக (ஊர் தலைவரின் அண்ணன் மகளாக) ஷீலா ராஜ்குமார். துணிச்சல் மிகுந்த கிராமத்து பெண்ணாகவே மாறியிருக்கிறார். ஊரில் உள்ள அநியாயங்களை தட்டிக்கேட்கும் கனமான கதாபாத்திரத்தில், ஷீலா கச்சிதம். ஷீலா மற்றும் ரிஷி ரிச்சர்டுக்காக வாதாடுகிற வக்கீலாக கருணாஸ், படம் பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் அள்ளுகிறார்.

பல படங்களில் வில்லனாக மிரட்டிய நிஷாந்த், இந்த படத்தில் நல்ல போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். துணை பதிவாளராக சேசு, டாக்டராக லேனா குமார், போலீஸ் கமிஷனராக ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

இரவு நேர திகில் காட்சிகளை அதன் வீரியம் குறையாமல் பதிய வைத்ததில் ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன், இசையமைப்பாளர் ஜூபின் ஆகிய இருவருக்கும் பெரும் பங்கு உண்டு.

கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன்: மோகன் ஜி. (இதற்கு முன்பு, ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தை இயக்கியவர்) போலி திருமண பத்திரங்கள் தயார் செய்து பெற்றோர்களை கதற விடும் கும்பல் என்ற ஒரு வரி கருவை வைத்துக்கொண்டு விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார், டைரக்டர் மோகன் ஜி. சாதி பெயர்களை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அதை சில வசன வரிகள் காட்டிக்கொடுக்கின்றன.

குற்றவாளிகளை கொலை செய்த கதாநாயகன் ரிஷி ரிச்சர்டுக்கு அதற்கான தண்டனை கொடுக்கப்படாதது, கதையில் உள்ள பெரிய ஓட்டை. இதுபோன்ற சில குறைகளை மறக்க செய்கிறது, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புக்குரிய காட்சிகள். குற்ற பின்னணியை கொண்ட திரைக்கதை வேகமாக பயணிப்பதால், பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றி விடுகிறார்கள்.

எப்போதாவது வரும் பரபரப்பான படங்கள் வரிசையில், ‘திரவுபதி’யும் இடம் பிடிக்கிறது.

Next Story