ஓசூரில் பா.ஜனதா பிரமுகருக்கு கத்திக்குத்து; பிரபல ரவுடி கைது


ஓசூரில் பா.ஜனதா பிரமுகருக்கு கத்திக்குத்து; பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 26 Nov 2017 11:15 PM GMT (Updated: 26 Nov 2017 7:52 PM GMT)

ஓசூரில் பா.ஜனதா பிரமுகரை கத்தியால் குத்திய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் நாகா (வயது 37). பிரபல ரவுடியான இவர் மீது ஓசூர் டவுன், அட்கோ உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு மரக்கடை அதிபர் முனிராஜ் என்பவரை கடத்தி ரூ.1 கோடி கேட்ட வழக்கில் நாகா கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு ஓசூர் பகுதியில் கூட்டாக கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியது, பஸ்தியில் ஒருவரை மிரட்டி பணம் கேட்டது என்று பல்வேறு வழக்குகள் நாகா மீது உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், ஓசூர் அம்மன் நகரை சேர்ந்த பா.ஜனதா கட்சி பிரமுகர் ரவி என்ற ஜிம் ரவி (34) என்பவரிடம், ரூ.6 லட்சம் வாங்கிய பஸ்தி திருமலை நகரை சேர்ந்த கார் டிரைவர் வருண் (33) என்பவரை காரில் கடத்திய வழக்கில், ரவுடி நாகா மற்றும் ரவி மீது அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நாகா, ரவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு ரவுடி நாகா மற்றும் ஜிம் ரவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜிம் ரவியை நாகா கத்தியால் குத்தினார். இதில் ரவியின் வயிறு, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. ரவுடி நாகாவிற்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகாவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்துக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஓசூர் நகராட்சி 24-வது வார்டில் நாகா, அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் போட்டியிடுகிறார். நாகா போட்டியிடுவதை அறிந்த, பா.ஜனதா கட்சி பெண் நிர்வாகி ஒருவர் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜிம் ரவி, ஓசூர் வக்கீல் லேஅவுட் பகுதியில் நாகாவிடம் நேற்று முன்தினம் இரவு பேசி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story