மும்பையில் நாடாளுமன்ற தேர்தல் : சினிமா நட்சத்திரங்கள் ஆர்வமாக வாக்களித்தனர்


மும்பையில் நாடாளுமன்ற தேர்தல் : சினிமா நட்சத்திரங்கள் ஆர்வமாக வாக்களித்தனர்
x
தினத்தந்தி 29 April 2019 11:56 PM GMT (Updated: 29 April 2019 11:56 PM GMT)

மும்பையில் உள்ள 6 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் 4-வது கட்டமாக மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட 17 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் காலை 7.30 மணியளவில் பழம்பெரும் நடிகை ரேகா பாந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

தமிழில் வெளியான தாம் தூம் படத்தில் அறிமுகமாகி இந்தியில் பிரபலமான நடிகை கங்கனா ரணாவத் மும்பை கார் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். அமெரிக்க பாடகரை திருமணம் செய்த நடிகை பிரியங்கா சோப்ரா காலை 8 மணியளவில் வெர்சோவாவில் ஓட்டுப்போட்டார்.

நடிகர் மாதவன் தனது மனைவி சரிதா பிரிஜேவுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், ‘‘பேசி பலனில்லை, காரணம் சொல்லாமல் ஓட்டு போடுங்கள்'' என கூறியுள்ளார்.

நடிகை மாதுரி தீக்சித் ஜூகுவில் ஓட்டுப்போட்டார். மின்சார கனவு புகழ் இந்தி நடிகை கஜோல், கணவர் அஜய் தேவ்கானுடன் ஜூகுவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.

நடிகர் அமீர்கான் மனைவி கிரன் ராவுடன் பாந்திராவில் உள்ள அனிஸ் உயர்நிலைப் பள்ளியில் ஜனநாயக கடமையை ஆற்றினார். பாடகர் சங்கர்மகாதேவன், மனைவி சங்கீதாவுடன் சென்று ஓட்டுப்போட்டார். மேலும் அவர், நாங்கள் ஓட்டுப்போட்டுவிட்டோம், நீங்கள் வாக்களித்துவிட்டீர்களா? என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். பழம்பெரும் நடிகர் அனுபம்கெர் ஜூகுவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். பாந்திராவில் நடிகை கரினா கபூர் வாக்களித்தார்.

நடிகையும், மதுரா தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ஹேமமாலினி வில்லேபார்லேயில் உள்ள பள்ளிக்கூடத்தில் வாக்களித்தார்.

வடமத்திய மும்பை தொகுதி வேட்பாளர் பிரியா தத்தின் சகோதரரும், நடிகருமான சஞ்சய் தத், மனைவி மான்யதாவுடன் பாந்திராவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருடன் சென்று ஓட்டுப்போட்டார்.

பிரபல இயக்குனர் கரன் ஜோகர் கார் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். பிரபல நடிகர் சல்மான்கான் பாந்திரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் ஜூகு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இதுதவிர நடிகைகள் மலைகா அரோரா, வித்யாபாலன், சோனாலி பிந்த்ரே, பாக்யஸ்ரீ, தியா மிர்சா, லாரா தத்தா, பூஜா பட், டுவிங்கிள் கன்னா, சோயா அக்தர், அகானா கும்ரா மற்றும் நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ராகுல் போஸ், சஞ்சய் கான், வருண் தவான், எம்ரான் ஹாஸ்மி, அர்ஜூன் ராம்பால், அர்ஜூன் கபூர், சோகைல்கான் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் ஆர்வமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மேலும் அவர்கள் வாக்குப்பதிவு குறித்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஜனநாயக திருவிழாவை கொண்டாடினர்.

வரிசையில் நிற்காமல் ஓட்டுப்போட சென்ற அமிதாப்பச்சன் குடும்பத்தினர் : வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று ஜூகுவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க சென்றார். அவருடன் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் இருந்தனர். இதில் அவர்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்களிக்க சென்றனர். இதை கண்டித்து அங்கு ஓட்டுப்போட வரிசையில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசிய நடிகை

தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் நேற்று கார் பகுதியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். ஓட்டுப்போட்டுவிட்டு வந்த போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும் விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டில் ஜி.எஸ்.டி.யால் வியாபாரிகள் வரி ஏய்ப்பு செய்வது குறைந்து உள்ளது. மனை விற்பனை ஒழுங்குப்படுத்துதல் சட்டத்தால் (ஆர்.இ.ஆர்.ஏ.) வீட்டு விலை குறைந்துள்ளது. மேலும் பல்வேறு மாற்றங்களை உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story