இந்தியன் - 2 படப்பிடிப்பில் 3 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் : கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது - சிலம்பரசன்


இந்தியன் - 2 படப்பிடிப்பில் 3 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் : கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது - சிலம்பரசன்
x
தினத்தந்தி 21 Feb 2020 3:29 PM GMT (Updated: 21 Feb 2020 3:37 PM GMT)

இந்தியன் - 2 படப்பிடிப்பில் 3 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது என நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.

சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் ல் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில்  ராட்சத கிரேன் திடீரென சரிந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் மீது விழுந்தது.இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் உணவு தயாரிப்புக் குழு உதவியாளராக பணியாற்றி வந்த மது, உணவுப்பொருள் விநியோக மேலாளராக இருந்த சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்கு காரணமான கிரேன் ஆப்ரேட்டரை போலீசார் தேடி வந்தநிலையில்,  தலைமறைவாக இருந்த  ராஜனை நசரத்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,  நடிகர் சிலம்பரசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

எமது சினிமா தொழிலாளர்களும், தொழில்நுட்பக்கலைஞர்களும் குறிப்பாக சண்டைக்காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப்பார்கிறேன். அவர்களின் வியர்வையில் தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்கிறேன். இந்தியன் - 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது.

இறந்து போன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத்தெரிவித்துக்கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக்கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்து விட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story