நடிகர்கள் விஜய்,சூர்யா பற்றி சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு: இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்


நடிகர்கள் விஜய்,சூர்யா பற்றி சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு: இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 10 Aug 2020 8:55 AM GMT (Updated: 2020-08-10T14:25:54+05:30)

நடிகர்கள் விஜய்,சூர்யா பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது நடவடிக்கையால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

அண்மையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிஸத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

மீரா மிதுன் விஜய் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி மீரா மிதுனைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மீரா மிதுன் நடிகர் விஜய் மனைவி சங்கிதாவை பற்றியும் சூர்யா மனைவி பற்றி ஜோதிகா பற்றியும் அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்.

மீரா மிதுனும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:-

நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.

அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார்.  மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் விஜய். பல்வேறு அடித்தளங்கள் அமைத்து விஜயும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.


Next Story